5960.

'நல் கடன்இது; நம் உயிர் நாயகர்
மற்கடம் தெறமாண்டனர்; வாழ்வு இலம்;
இல் கடந்து இனிஏகலம் யாம்' எனா,
வில் கடந்தநுதல் சிலர் வீடினார்.*

     வில் கடந்தநுதல் சிலர் - வில்லின் வளைவையும்வென்ற நெற்றியை
உடைய அரக்க மகளிர் சிலர்; நம் உயிர் நாயகர் - நமது உயிர் போன்ற
கணவன்மார்கள்; மற்கடம் தெற மாண்டனர் - ஒரு குரங்கு கொல்ல இறந்து
போயினர்; யாம் வாழ்வு இலம் - யாம் மங்கல வாழ்க்கை இல்லாதவரானோம்; இனி இல் கடந்து ஏகலம்
 - இனிமேல் (கைம்மை
நிலையில்) வீட்டைக் கடந்து வெளியில் செல்லமாட்டோம்; எனா - என்று
உறுதி எடுத்துக் கொண்டு; நல் கடன் இது வீடினார் - இதுவே நல்ல
கடப்பாடு ஆகும் என்று துணிந்து (அந்த நெருப்பிலே விழுந்து) இறந்தார்கள்.

     சில உத்தமப்பெண்களின் இயல்பு கூறப்பட்டது.              (18)