5963. | நெருக்கி மீ மிசை ஓங்கு நெருப்பு அழல் செருக்கும் வெண்கதிர்த் திங்களைச் சென்று உற உருக்க,மெய்யின் அமுதம் உகுத்தலால், அரக்கரும் சிலர்ஆவி பெற்றார் அரோ.* |
மீமிசை நெருக்கிஓங்கும் நெருப்பு அழல் - மேன்மேலும் திண்ணியதாக ஓங்கிய நெருப்பின் வெம்மை; செருக்கும் வெண் கதிர் திங்களை - களிப்பைத் தரும் வெண்மையான கிரணங்களை உடைய சந்திரனை; சென்று உற உருக்க - சென்று அடைந்து நன்றாக உருகச் செய்ய, (அதனால்); மெய்யின் அமுதம் - அச்சந்திரனின் உடலிலிருந்து; உகுத்தலால் - அமிர்தம் சிந்துவதால்; அரக்கர் சிலரும் - இறந்த அரக்கரில் சில பேரும்; ஆவி பெற்றார் - உயிர் பெற்றார்கள். நெருப்பு, சந்திரமண்டலம் சென்று தாக்கியதனால், உருகிய அமிர்தத்துளி பட்டு, நெருப்பில் வெந்து இறந்த அரக்கர்களில் சிலரும் உயிர் பெற்று எழுந்தனர் என்பதாம். (21) |