5964. | பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல், கருகி முற்றும்எரிந்து, எழு கார் மழை, அருகு சுற்றும்இருந்தையதாய், அதின் உருகுபொன்-திரள் ஒத்தனன், ஒண் கதிர்.* |
பருதி பற்றிநிமிர்ந்து எழு பைங்கனல் - சூரிய மண்டலத்தை அளாவிஉயர்ந்து எழுந்த அந்தப் புதிய நெருப்பின் வெம்மையால்; எழு கார் மழைமுற்றும் எரிந்து கருகி - வானத்தில் செல்லுகின்ற காள மேகங்கள் முழுவதும்வெந்து கருகி; அருகு சுற்றும் இருந்தை அது ஆய் - பக்கங்களில்சூழ்ந்திருந்த கரியைப் போல விளங்க; ஒள் கதிர் அதின் உருகு பொன்திரள் ஒத்தன - ஒளி தங்கிய சூரியன், அக்கரித்தொகுதியினிடையே உருகுகின்ற பொற் கட்டியைப் போலத் தோன்றினான். சூரியனிடத்துஉள்ள நெருப்பினும் வேறுபட்டது அனுமன் இலங்கையில் இட்ட நெருப்பு. அதனால் 'பைங்கனல்' எனப்பட்டது, சென்ற பாடலும், இதுவும் சந்திரன் இருப்பதையும் சூரியன் தோற்றத் தையும் கூறுகின்றன.அதனால் இந்தக் காலம் பௌர்ணமி என்று அறியலாம். அனுமன் சீதாபிராட்டியைப் பார்த்த காலத்தை ஆராய்வதற்கு உதவும் கவிதைகள் இவை இரண்டும் என்னலாம். இருந்தை - கரி. (22) |