5965.

தளைகொளுத்திய தாவு எரி, தாமணி
முளை கொளுத்தி,முகத்திடை மொய்த்த பேர்
உளை கொளுத்த,உலந்து உலைவு உற்றன-
வளை குளப்பின் மணி நிற வாசியே.

     தளை கொளுத்தியதாவு எரி - (குதிரைகளின்)பின்கால்களைப்
பிணைத்திருக்கும் கயிறுகளை எரித்த மேலே தாவி எழும்பிய தீயானது;
தாமணி முளை கொளுத்தி - தாமணி என்னும் கழுத்துக் கயிற்றுடன்,
அக்கயிறு கட்டப்பட்டிருந்த  முளைகளையும் எரித்து; முகத்திடை மொய்த்த
பேர் உளை கொளுத்த -
முகத்தின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த
பெரியபுற மயிர்கள் கொளுத்தப்பட்டு எரிய, (அதனால்); வளைகுளப்பின்
மணி நிற வாசி -
வளைந்த குளம்பையும் அழகிய நிறத்தையும் உடைய
குதிரைகள்; உலந்து உலைவு உற்றன - வாடித்தவித்து அழிந்தன.

     தளை - விலங்குபோல் காலில் பூட்டப்படும் கயிறு; தாமணி - கழுத்தில்
கட்டும் கயி்று; வளைகுளப்பு - வளைந்த கால் குளம்பு; வாசி - குதிரை.
குளம்பு என்பது குளப்பு என வலித்தல் விகாரமாக வந்தது.           (23)