5967.

கோசிகத்துகில் உற்ற கொழுங் கனல்
தூசின்உத்தரிகத்தொடு சுற்றுறா,
வாச மைக் குழல்பற்ற மயங்கினார்-
பாசிழைப்பரவைப் படர் அல்குலார்.

     பாசு இழை பரவைபடர் அல்குலார் - பசிய
பொன்னாபரணங்களையும் கடல் போலப் பரந்த அல்குலையும் உடையவரான
அரக்கமகளிர்கள்; கோசிகம் துகில் உற்ற கொழும் கனல் - அவர்கள்
இடையில் உடுத்திய கோசிகம் என்னும் பட்டாடையில் பற்றிய வலி மிகுந்த
நெருப்பு; உத்தரிக தூசின் ஓடும் சுற்று உறா - மேலாடையுடனே சூழ்ந்து
பற்றிக் கொண்டு; வாசம் மை குழல் பற்ற - நறுமணம் மிகுந்த கரு நிறமான
கூந்தலில் பற்றிக்கொள்ளவும்; மயங்கினார் - என்ன செய்வது என்று
அறியாது திகைத்து அழிந்தார்கள்.

     சில அரக்கியர்,அரையாடை நெருப்பினால் சூழப் பெற்று,
மேலாடையிலும் பரவிக் கூந்தலிலும் பற்றவே, திகைத்து மயங்கினர் என்பதாம்.
கோசிகம் - ஒரு வகைப் பட்டு; இது அரையாடை; உத்தரிகம் - மேலாடை;
தூசு - பஞ்சினால் ஆகிய ஆடை.                            (25)