5969. | பஞ்சரத்தொடு, பசு நிறக் கிளி வெந்து பதைப்ப, அஞ்சனக் கணின்அருவி நீர் முலை முன்றில் அலைப்ப, குஞ்சரத்து அனகொழுநரைத் தழுவுறும் கொதிப்பால், மஞ்சு உறப் புகும்மின் என, புகையிடை மறைந்தார். |
பசுநிறம் கிளி -(தம்வளர்த்த) பசுமை நிறம் உள்ள கிளிகள்; பஞ்சரத்தொடு வெந்து பதைப்ப - (தாம் இருந்த) கூட்டுடனே நெருப்பில் வெந்துதுடிக்க (அதுகண்ட துன்பத்தால்); அஞ்சனம் கணின் அருவி நீர் முலைமுன்றில் அலைப்ப - மைபூசிய கண்களினின்றும் அருவி போலப் பெருகும்நீர், தம்தனங்களின் முகட்டிடத்து விழுந்து வருத்த; குஞ்சரத்து அன கொழுநரை - யானை போன்ற (வலிய பெரிய) தமது கணவன்மார்களை; தழுவுறும் கொதிப்பால் - தழுவிக் கொள்ளக் கருதிய பதைப்பினால்; மஞ்சு உற புகும் மின் என புகையிடை மறைந்தார் - மேகத்தினுள்ளே புகுகின்ற மின்னலைப் போல புகையினுள்ளே மறைந்தார்கள். எரிபுகுந்தமாளிகையில் இருந்த மகளிர்கள், தமது கணவரைப் பின்பற்றி வெளியில் வந்தார்கள். வந்த வேகத்தில் தாம் வளர்த்த கிளிகளின் கூட்டைத் திறந்து விட மறந்தார்கள். திரும்பிப் பார்க்கும் போது, அவைகள் கூட்டோடு வெந்து கிடந்தன. அந்தத் துன்பத்தால் அழுதனர். சோகத்தைத்தணித்துக் கொள்ள, தமது கணவன்மார்களைத் தொடர்ந்து சென்று தழுவிக்கொள்ள ஓடினர்; அதற்குள் புகை மிகுந்தமையால் அதில் மறைந்தனர். இக்காட்சி, மின்னல் மேகத்தில் மறைந்ததது போன்றிருந்தது. (27) |