கனலுக்குப் பயந்துகடலில் வீழ்தல் 5975. | கரிந்துசிந்திடக் கடுங் கனல் தொடர்ந்து உடல் கதுவ, உரிந்தமெய்யினர், ஓடினர், நீரிடை ஒளிப்பார், விரிந்தகூந்தலும், குஞ்சியும் மிடைதலின், தாமும் எரிந்து வேகின்றஒத்தன, எறி திரைப் பரவை. |
கரிந்து சிந்திடகடுங்கனல் தொடர்ந்து உடல் கதுவ - கருகி உதிர்ந்து போகும்படி கொடிய நெருப்பு தொடர்ந்து அரக்கர்களது உடல்களைப் பற்றலும்; உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் - (அதனால்) தோல் உரியப் பெற்ற உடலினராய் ஓடிப் போய் (வெப்பம் தணிவதற்காக) கடல் நீரில் முழ்கி மறைந்து கொண்டவர்களாயினர்; விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் - (அரக்கரின் பெண்டிர் ஆடவர் என்ற இருபாலாரின்) விரிந்த தலைமயிரும் (அக்கடலில்) மிகுந்து நிறைந்தமையால்; எறி திரை பரவை தாமும் எரிந்து வேகின்ற ஒத்தன - வீசும் அலைகளை உடைய கடல்களும் தீப்பட்டு, வேகின்றவை போன்றன. அரக்கர்களின்தலைமயிர் செம்பட்டையாதலின், கடற்பரப்பில் அவை நெருங்கித் தோன்றியது. கடல் தீப்பற்றியது போல் காணப்பட்டது என்பது கற்பனை. (33) |