5976. | மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை அருங் கையால்பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற, நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக் கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி. |
மருங்கின் மேல்ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொரு சிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு பின்அரற்ற - வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர; அரக்கியர் -அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக் கொள - நெறித்த கூந்தலிலே சுறு சுறு என்றுநெருப்புபற்ற; கதறி - வாய்விட்டுக் கதறிக் கொண்டு; கருங்கடல் தலை வீழ்ந்தனர் - கரிய கடலினிடத்துப் போய் விழுந்தார்கள். அரக்கியர்கூந்தலில் நெருப்புப் பற்றியதனால், வலி தாங்காமல் கதறிக் கொண்டு இடம் விட்டுச் சென்று, கடலில் குதித்தனர் என்பது கருத்து. (34) |