இராவணன் மனையி்ல்தீப்பற்றுதல்

5980.

நீரைவற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி,
தாருவைச் சுட்டு,மலைகளைத் தழல்செய்து, தனி மா
மேருவைப் பற்றிஎரிகின்ற கால வெங் கனல்போல்,
ஊரை முற்றுவித்து,இராவணன் மனை புக்கது-                                  உயர் தீ.

     உயர் தீ -உயர்ந்துஎழுந்த அந்த நெருப்பு; நீரை வற்றிட பருகி -
கடல், குளம் முதலிய எல்லா நீர்நிலைகளும் வற்றிப் போகும் படி உறி்ஞ்சி;
மாநெடுநிலம் தடவி -
பெரிய நீண்ட நிலம் முழுவதும் பரந்து அழித்து;
தாருவை சுட்டு -
அங்குள்ள மரங்களை எரித்து; மலைகளை தழல் செய்து
-
மலைகளைத் தணல் போல விளங்கும்படி வேகச் செய்து; தனி மா
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் -
ஒப்பற்ற மகா மேரு
மலை என்னும் மலையைப் பற்றி எரிகின்ற வெவ்விய கற்பாந்த காலத்து
அக்கினி போன்று; ஊரை முற்றுவி்த்து - அந்த இலங்கை நகர் முழுவதையும்
எரித்துவிட்டு; இராவணன் மனை புக்கது - இராவணனுடைய
அரண்மனையுள் புகுந்தது.

     ஊழிக் காலத்துநெருப்பு, சுற்றிலும் எரித்த பின்பு, நடுவில் உள்ள
மேருமலையில் புகுவது போல, அனுமன் இட்ட தீ, இலங்கை நகர்
முழுவதையும் எரித்த பிறகு,இடையில் உள்ள இராவணன் மாளிகையில் புக்கது
என்பதாம்.                                                 (38)