| 5982. | நாவியும்,நறுங் கலவையும், கற்பகம் நக்க பூவும், ஆரமும்,அகிலும் என்று இனையன புகைய, தேவு தேன் மழைசெறி பெருங் குலம் எனத் திசையின் பாவைமார் நறுங்குழல்களும், பரிமளம் கமழ்ந்த. |
நாவியும் -(இராவணன்மாளிகையில் இருந்த) கத்தூரியும்; நறும் கலவையும் - வாசனை உடைய (குங்குமப் பூ முதலிய) கலப்புக்கு உரிய பொருள்களும்; கற்பகம் நக்க பூவும் - கற்பக மரங்களில் மலர்ந்த மலர்களும்; ஆரமும் - சந்தனமும்; அகிலும் - அகில் கட்டைகளும்; என்று இனையன - என்று சொல்லத்தக்க இவ்விதமான வாசனைப் பொருள்கள் எல்லாம்; புகைய - எரிந்து புகையாக, (அதனால்);திசையின் பாவை மார் நறுங்குழல்களும் பரிமளம் தேன் மழை செறி தேவு பெரும் குலம் என கமழ்ந்த - எட்டுத் திக்குகளைக் காக்கும் தெய்வமகளிரது இயற்கை மணம் கமழும் கூந்தல்களும் செயற்கை நறுமணம் பெற்று தேன்மழை பொழிகின்ற தெய்வத்தன்மை உடைய பெரிய மேகக் கூட்டம் போலத் தோன்றி மணம் வீசின. இயற்கைமணத்தோடு செயற்கை மணமும் கமழும் திசைக்காவல் மகளிரது கூந்தலுக்கு, தேன் மழை பொழியும் மேகக் கூட்டம் உவமை ஆயிற்று. பரிமளம் மணம். (40) |