| 5983. | சூழும் வெஞ்சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா ஆழி வெஞ்சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்- ஊழி வெங் கனல்உண்டிட, உலகம் என்று உயர்ந்த ஏழும்வெந்தென-எரிந்தன, நெடு நிலை ஏழும். |
சூழும் வெம் சுடர்தொடர்ந்திட - எங்கும் சூழ்ந்த கொடிய நெருப்புச்சுடர், போய்த் தாவியதனால்; யாவரும் தொடரா ஆழி வெம் சினத்துஆண் தொழில் இராவணன் - எவரும் அணுகமுடியாத கடல் போன்றகொடிய கோபத்தையும், வீரச் செயலையும் உடைய இராவணனது; மனையின்நெடு நிலை ஏழும் உலகம் என்று உயர்ந்த ஏழும் - மாளிகையின் நீண்டுஉயர்ந்த ஏழு நிலை மாடங்களும், ஒன்றன் மேல் ஒன்றாக உயர்ந்துள்ள,உலகம் என்று சொல்லப்படுகின்ற ஏழு இடங்களும்; ஊழிவெம்கனல் உண்டிடவெந்து என எரிந்தன - யுகாந்த காலத்துக் கொடிய நெருப்பு உண்ணஎரிந்தாற் போன்றனவாய் வெந்து அழிந்தன. ஊழித்தீயில்மேலுலகங்கள் ஏழும் எரிந்து அழிந்தது போன்று, இராவணனது மாளிகையின் எழு நிலை மாடங்களும் எரிந்து அழிந்தன என்பதாம். (41) |