5984. | பொன் திருத்தியது ஆதலால், இராவணன் புரை தீர் குன்றம் ஒத்துஉயர் தட நெடு மா நிலைக் கோயில், நின்று துற்று எரிபருகிட, நெகிழ்வுற உருகி, தென் திசைக்கும்ஓர் மேரு உண்டாம் என, தெரிந்த. |
இராவணன் -இராவணனுடைய; குன்றம் ஒத்து உயர் தட நெடு மாநிலை கோயில் - மலை போல் உயர்ந்ததும், அகன்ற நீண்ட பெரிய நிலைகளைஉடையதுமான அரண்மனை; புரை தீர் பொன் திருத்தியது ஆதலால் - குற்றமற்ற பொன்னால் அமைக்கப்பட்டதாதலால்; எரி நின்று, துற்றுபருகிட - நெருப்பு எழுந்து வாயினால் கவ்விக் குடிப்பது போல் எரிப்பதனால்; நெகிழ்வு உற உருகி - நெகிழ்ந்து உருகி, (ஒரே திரளாகி); தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த - தெற்குத்திக்கிலும் ஒரு மேரு மலை உள்ளது என்று சொல்லும்படி காணப்பட்டது. மேரு மலை வடதிசையில் உள்ளது என்பது புராணக் கொள்கை. இராவணன் மாளிகை மலை போல் உயர்ந்து பொன்னால் அமைக்கப்பட்டதால், அது நெருப்பில் உருகி ஒன்றாகத் திரண்டு, தென்திசை மேரு மலைபோல் தோன்றிற்று என்பதாம். (42) |