அரக்கர்நிகழ்ந்தது கூற இராவணன் சினத்தல் 

5987.

கரங்கள்கூப்பினர், தம் கிளை திருவொடும்
                          காணார்,
இரங்குகின்ற வல்அரக்கர் ஈது இயம்பின்;
                          'இறையோய் !
தரங்க வேலையின்நெடிய தன் வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டதுஈது' என்றலும், இராவணன்
                          கொதித்தான்.

     தம் கிளைதிருவொடும் காணார் - (அவ்வாறு இராவணன்
கேட்டதும்)தமது சுற்றத்தாரையும் வீரம் செல்வம் முதலிய பொலிவையும்
இழந்து;இரங்குகின்ற வல் அரக்கர் - ஏங்கிக் கொண்டிருக்கின்ற வலிய
அரக்கர்கள்;கரங்கள் கூப்பினர் ஈது இயம்பினர் - கைகளைக் கூப்பிக்
கொண்டுபின்வரும் இச்செய்தியைச் சொன்னார்கள்; இறையோய் ! -
அரசனே !;தரங்க வேலையின் நெடியதன் வால் இட்டதழலால் -
அலைகளை உடையகடலினும் நீண்ட தனது வாலிலே நாம் வைத்த
நெருப்பால்; குரங்கு சுட்டதுஈது என்றலும் - அக்குரங்கு எரித்தது
இதுவாகும் என்று சொன்ன உடன்;இராவணன் கொதித்தான் - இராவணன்
கோபம் கொண்டான்.                                       (45)