6001.

தோய்த்தனன் வால்; அது தோயக்
காய்ச்சின வேலைகலந்தார்,
போய்ச் சிலர்பொன்றினர் போனார்
'ஏச்சு' என,மைந்தர் எதிர்ந்தார்.

     வால்தோய்த்தனன் - அனுமன் தனது வாலைக்கடலில் தோய்த்தான்;
அது தோய -
(நெருப்பு பிடித்த) அந்த வாலைத் தோய்த்ததினால்; காய்ச்சின
வேலை போய் கலந்தார் சிலர் -
கொதிப்படைந்த கடலில் சென்று
முழுகியவர்களில் சிலர்; பொன்றினர் போனார் மைந்தர் -
இறந்தொழிந்தார்கள் (சில இறவாது நின்ற) வீரர்கள்; ஏச்சு என - (இவ்வாறு
கடலில் மூழ்குவது) நமக்கு இழிவு என்று கருதி; எதிர்ந்தார் - அனுமனை
எதிர்த்தார்கள்.

      மைந்தர் -வலிமை உடையவர்; வீரர்.                    (59)