| 6002. | சுற்றின தேரினர் தோலா வில் தொழில்வீரம் விளைத்தார்; எற்றினன்மாருதி; எற்ற, உற்று எழுவோரும்உலந்தார். |
சுற்றின தேரினர்- அனுமனைச் சூழ்ந்து கொண்ட தேர் ஏறிய வீரர்கள்;தோலா வில் தொழில் வீரம் விளைத்தார் - தோல்வி அடையாத தம்விற்போர்த் தொழிலில் வீரத்தைக் காட்டிப் போர் செய்தார்கள்; மாருதி எற்றினன் - அனுமன் அவர்களைத் தாக்கி அடித்தான்; எற்ற -அவ்வாறு தாக்கியதனால்; உற்று எழுவோரும் உலந்தார்- அடிபட்டு பொர முனைந்து எழுந்த வீரர்களும் அழிந்தார்கள். 'எழுவோர்' - ஏழுவீரர்கள் என்றும், இவர்கள் அமைச்சர்களின் மக்கள் என்றும் பொருள் விளக்கம் கொடுக்கலாம். 51-ம் பாடலில் ஓர் எழு வீரர் உயர்ந்தார் ? என்ற தொடரை நோக்கும் போது எழுவோர் ? என்பதற்கு ஏழுவீரர்கள் எனப் பொருள் கொள்வது பொருத்தமே. (60) |