6005.

பார்த்தனள், சானகி, பாரா
'வேர்த்து எரிமேனி குளிர்ந்தாள்,
'வார்த்தை என்?' 'வந்தனை' என்னா,
போர்த்தொழில் மாருதி போனான்.

     சானகிபார்த்தனள் - பிராட்டி தன்னைவணங்கிய அனுமனைப்
பார்த்தாள்; பாரா - பார்த்தவுடன்; வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் -
(அனுமனுக்கு என்ன ஆயிற்றோ என) வியர்த்துக் கொதிக்கின்ற தன் உடல்
குளிர்ந்தவளானாள்; வார்த்தை என் ? - யான் சொல்ல வேண்டியது
எதுவேனும் உளதோ என்றாள்; போர் தொழில் மாருதி வந்தனை என்னா
போனான் -
போர் செய்வதில் வல்லவனான அனுமன் 'வணக்கம்' என்று
சொல்லி, பிராட்டியிடம் விடை பெற்றுச் சென்றான்.

     'வார்த்தை என்?' என்பதை அனுமன் கூற்றாகவும் கொள்ளலாம்.
'வார்த்தை உண்டோ என்று பிராட்டி கேட்டருளத் தேவரீரைச் சேவிக்க விடை
கொண்டேன் என்று விண்ணப்பம் செய்தார் மாருதி' என்பது பழைய உரை.
                                                          (63)