வான்வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல் 

அறுசீர் ஆசிரியவிருத்தம் 

 6007.

'நீங்குவென் விரைவின்' என்னும் நினைவினன்,
                            மருங்கு நின்றது
ஆங்கு ஒரு குடுமிக்குன்றை அருக்கனின்
                           அணைந்த ஐயன்,

வீங்கினன்,உலகை எல்லாம் விழுங்கினன் என்ன;
                                     வீரன்
பூங் கழல் தொழுதுவாழ்த்தி, விசும்பிடைக் கடிது
                                     போனான்.

     விரைவின்நீங்குவென் என்னும் நினைவினன் - சீக்கிரத்தில் இந்த
இலங்கையினின்றும் போவேன் என்கின்ற எண்ணம் உடையவனாய்; ஆங்கு
மருங்கு நின்றது ஒரு குடுமிக்குன்றை -
அந்த இலங்கையின் அருகேயிருந்த
சிகரத்தை உடைய ஒரு மலையை; அருக்கனின் அணைந்த ஐயன் -
சூரியனைப் போன்று சென்று சேர்ந்த அனுமன்; உலகை எல்லாம்
விழுங்கினன் என்ன வீங்கினன் -
எல்லா உலகங்களையும் உட்
கொண்டவனான திருமால் போன்று தன் வடிவம் பூரித்து நின்று; வீரன்
பூங்கழல் தொழுது -
இரகு குல வீரனான இராமபிரானது அழகிய
திருவடிகளை, (தனது மனத்தால் நினைத்து) வணங்கி்த் துதித்து; விசும்பிடை
கடிது போனான் -
ஆகாய வழியாக விரைவில் சென்றான்.           (1)