6011.

'தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி,
மேல் முறைவைத்தேம்; அண்ணல் ! நுகர்ந்தனை,
                              மெலிவு தீர்தி;
மான வாள் முகமேநங்கட்கு உரைத்தது மாற்றம்'
                              என்று,
தாம் நுகர்சாகம் எல்லாம் முறை முறை சிலவர்
                              தந்தார்.

     சிலவர் -சில வானரவீரர்கள்; அண்ணல் மானம் வாள் முகமே
நங்கட்கு மாற்றம் உரைத்தது -
(அனுமனை நோக்கி) பெரியோய் !
பெருமையும் ஒளியும் பொருந்திய உன் முகமே எங்களுக்கு (பிராட்டியைக்
கண்ட நற்செய்தியாகிய) சொற்களைத் தெரிவித்துவிட்டது; நறியன தேனொடு
கிழங்கும் காயும் அரிதின் தேடி மேல் முறை வைத்தோம் -
(ஆதலால்)
நல்ல சுவையுள்ளனவான தேனையும் கிழங்குகளையும் காய்களையும்
அருமையாகத் தேடிக் கொணர்ந்து முன்னமே ஒழுங்காக வைத்துள்ளோம்;
நுகர்ந்தனை மெலிவு தீர்தி என்று - நீ உண்டு, களைப்பைத் தீ்ர்த்துக்
கொள்வாயாக என்று சொல்லி; தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை
தந்தார் -
தாம் விரும்பி உண்ணக் கூடிய இலையுணவு முதலியவற்றை
எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.     (5)

     அனுமன் மேனியில் உள்ளபுண்களை நோக்கி வானரர் வருந்துதல்