| 6012. | தாள்களில், மார்பில், தோளில், தலையினில், தடக் கை தம்மில், வாள்களின்,வேலின், வாளி மழையினின் வகிர்ந்த புண்கள், நாள்கள் மேல்உலகில் சென்ற எண் என, நம்பி கண்ண ஊழ் கொளநோக்கி நோக்கி, உயிர் உக, உளைந்து உயிர்த்தார். |
தாள்களில்மார்பில் தோளில் தலையினில் தடக்கை தம்மில் - (அவ்வானரவீரர்கள்) அனுமனுடைய பாதங்களிலும், மார்பிலும், தோள்களிலும், தலையிலும், பெரிய கைகளிலும்; வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் - அரக்கர்களான பகைவர்களுடைய வாள்களாலும், வேல்களாலும், அம்பு மழைகளாலும், பிளந்து உண்டாக்கப்பட்ட காயங்கள்; உலகில் நாள்கள் மேல் சென்ற எண் என - உலகத்தில் நாள்கள் மேலே கழிந்த எண்கள் போல (அளவு கடந்தனவாய்) நம்பி கண்ண ஊழ் கொள நோக்கி நோக்கி - அனுமனிடத்து உள்ளனவற்றை முறைமை பொருந்த ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து; உயிர் உக உளைந்து உயிர்த்தார் - தம்உயிர் சிந்திப் போகுமாறு வருந்திப் பெருமூச்சுவிட்டார். அனுமன் உடலில்உள்ள புண்கள் அளவற்றன என்பதை, 'நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என' என்ற தொடர் காட்டுகின்றது. எண்ணற்றவையைக் குறிக்க 'வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று' என்றதிருக்குறள் (22) தொடர் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. (6) |