வானரர் விரும்பியவண்ணம், அனுமன் நடந்த செய்திகளைக் கூறுதல் 

 6014.

என்றலும்,கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சித்
                         தாழ்ந்து
நின்றனர், உவகைபொங்க விம்மலால் நிமிர்ந்த
                         நெஞ்சர்,
'சென்றது முதலா,வந்தது இறுதியாச் செப்பற்பாலை,
வன் திறல்உரவோய் !' என்ன, சொல்லுவான்
                          மருத்தின் மைந்தன்:

     என்றலும் -என்று(அனுமன்) கூறியவுடன்; எழுந்தனர் - (வானர
வீரர்கள் அனைவரும்) எழுந்து நின்றவர்களாய்; கரங்கள் கூப்பி இறைஞ்சி
தாழ்ந்து நின்றனர் -
தம் கைகளைக் குவித்து, வணங்கித் தாழ்ந்துநின்று;
உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் -
மகிழ்ச்சி மேலிட
பூரிப்பால் நிமிர்ந்து (ஊக்கம் கொண்ட) மன முடையவர்களாய்; வல் திறல்
உரவோய் ! -
(அனுமனை நோக்கி) மிக்க வலிமை உடையவனே !; சென்றது
முதலா வந்தது இறுதியா செப்பல் பாலை என்ன -
நீ இங்கிருந்து போனது
முதலாக, இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தது முடிவாக, (நடந்ததை) இங்குச்
சொல்வாயாக என்று கேட்டுக் கொள்ள; மருத்தின் மைந்தன் சொல்லுவான்
-
வாயு தேவனின் மகனான அனுமன் (பின்வருமாறு) சொல்லுவானாயினான். 
                                                            (8)