வானர வீரரின்உரைப்படி, அனுமன் இராமனிடம்முந்திச் செல்லுதல். 6018. | 'ஏத நாள்இறந்த; சால வருந்தினது இருந்த சேனை; ஆதலால்விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம் எம்மைச் சாதல் தீர்த்துஅளித்த வீர ! தலைமகன் மெலிவு தீரப் போது நீமுன்னர்' என்றார்; 'நன்று' என அனுமன் போனான். |
அளியம் எம்மைசாதல் தீர்த்து அளித்த வீர ! - உம்மால் அன்பு செய்யத்தக்கவராகிய எங்களை இறந்து போதலினின்றும் நீக்கிக் காத்தருளிய பெரிய வீரனே !; ஏத நாள் - பிராட்டியைத் தேடி வரும் காரணமாய்க் குறிப்பிட்ட நாட்கள்; இறந்த - கடந்து போயின; இருந்த சேனை சால வருந்தினது - உம் வரவை எதிர் நோக்கி இங்கு தங்கியிருந்த சேனை, மிகவும் துயரம் மேற் கொண்டது; விரைவின் செல்லல் ஆவது அன்று ஆதலால் - வேகமாகச் செல்லும்வலிமை உடையது அல்ல ! ஆகையால்; தலைமகன் மெலிவு தீர நீ முன்னர் போது என்றார் - தலைவனான இராமபிரானது துன்பம் நீங்க, நீ முன்னதாக, அப்பெருமானிடம் போவாயாக என்று வானர வீரர் கூறினார்கள்; நன்று என அனுமன் போனான் - 'நல்லது' என்று சொல்லிவிட்டு இராமபிரான் இருக்கும் இடம் நோக்கி அனுமன் சென்றான். ஏத நாள் -பிராட்டியைத் தேடி வரும் காரணமாகக் குறிக்கப்பட்ட நாள்; அது ஒரு மாதத் தவணை; 'ஒரு மதி முற்றுறாத முன் முற்றுதி்ர்' (கம்ப. 4457) குறிப்பிட்ட நாள் கடந்தமையால், தமது அரசன் சுக்கிரீவன் தண்டிப்பானே என்பது, சேனையின் வருத்தம். சாதல் தீர்த்து அளித்தல் - சேனை சாகத் துணிந்தது. 'மாண்டுறுவது நலம் என வலித் தனம்'. (கம்ப. 4658) அனுமன், இராமபிரானிடம் விரைவில் செல்ல வேண்டியதைக் காரணத்துடன் வானர வீரர்கள் கூறியதைத் தெரிவிப்பது இது. (12) |