சுக்கிரீவன்தேற்ற, இராமன் தேறுதல் கலிவிருத்தம் 6020. | கார் வரை இருந்தனன் கதிரின் காதலன், சீரிய சொற்களால் தெருட்ட, செங் கணான் ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா, சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான். |
செங்கணான்சோர்தொறும் சோர்தொறும் - சிவந்த கண்களை உடையவனான இராமபிரான் (பிராட்டியின் பிரிவாற்றாமையால்) உயிர் நீங்கினான் போன்று மூர்ச்சிக்கும் போதெல்லாம்; கார் வரை இருந்தனன் கதிரின் காதலன் - மேகம் தங்கியுள்ள மலையில் இருந்தவனாகிய சூரியன் மகனான சுக்கிரீவன்; சீரிய மொழிகளால் தெருட்ட - சிறந்த மொழிகளைக் கூறித் தேற்ற, (அதனால்); ஆயிரம் ஆர் உயிர் உடையன் ஆம் என - (இராமபிரான்) பல அரிய உயிர்களை உடையவன் போல; உயிர்த்து தோன்றினான் - ஓய்ந்து மீண்டும் உயிர் பெற்றவன் போல (பலமுறை) மூச்சு விட்டுக் காணப் பெற்றான். பிராட்டியின்பிரிவுத் துயரம் வாட்டுதலினால், மூர்ச்சித்து உயிர் சோர்ந்த இராமபிரானை, சுக்கிரீவன், தனது நல்ல சொற்களால் தெளிவித்தான். அதனால் இராமபிரான் உயிர்த்துத் தோன்றினான் என்பதாம். இராமபிரான், உயிர் அடங்கியும், மீண்டு வந்தும், பலமுறை நிகழப் பெற்றவனாதலால், 'ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம்' எனப்பட்டான். (14) |