6021.

'தண்டல்இல் நெடுந் திசை மூன்றும் தாயினர்,
கண்டிலர்மடந்தையை' என்னும் கட்டுரை,
உண்டு உயிர்அகத்து என ஒறுக்கவும், உளன்,
திண் திறல்அனுமனை நினையும் சிந்தையான்.

     தண்டல் இல்நெடுந்திசை மூன்றும் தாயினர் - தடையில்லாது,
(வடக்கு, கிழக்கு மேற்கு என்ற) பெரிய மூன்று திசைகளிலும் தாவிச்
சென்றவர்கள்; மடந்தையைக் கண்டிலர்
 என்னும் கட்டுரை -பிராட்டியைக்
கண்டார் இல்லை என்று கூறிய உறுதிச் சொல்; அகத்து உயிர் உண்டு என
ஒறுக்கவும் -
தன்னுள் உயிர் இருக்கின்றது என்னும் நிலையில், தன்னை
வருத்தவும்; திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான் உளன் - மிக்க
வலிமை வாய்ந்த அனுமனை எண்ணுகின்ற மனத்தினான இராமபிரான், உயிர்
உள்ளவன் என்ற நிலையில் இருந்தான்.

     தென் திசை தவிரமற்றைய மூன்று திசைகளுக்கும் சென்றவர்கள்
பிராட்டியைக் காணாதவர்களாக வந்தனர் என்ற சொல், வருத்தவும்,
இராமபிரான் உயிர் உளனாயிருந்தது, அனுமன் பிராட்டியைக் கண்டு வருவான்
என்ற நம்பிக்கையால் தான். 'திண் திறல் அனுமனை நினையும் சிந்தையால்,
உயிர் உளன்' என்றும் பொருள் கொள்ளலாம்.                    (15)