சுக்கிரீவனைநோக்கி இராமபிரான் துயருடன் பேசுதல்

 6023.

'குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
வெறிக் கருங்குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண்வந்திலர்; மாண்டுளார்கொலோ ?
பிறித்துஅவர்க்கு உற்றுளது என்னை ?-
                              பெற்றியோய் !'

     பெற்றியோய் -நற்பண்புடையவனே !; வெறிகரும் குழலியை தென்
திசை நாடல் மேயினார் -
நறு மணம் உள்ள கரிய கூந்தலை உடைய
சீதையை தெற்குத் திசையில் தேடுதலை மேற்கொண்டு சென்ற அனுமன்
முதலிய வானர வீரர்கள்; குறித்த நாள் இகந்தன குன்ற - நாம் குறிப்பிட்டுக்
கூறிய தவணை நாட்கள் கடந்தன; நாள் கடந்து தேயவும்; இவண்மறித்து
வந்திலர் -
இங்கு திரும்பி வந்தாரல்லர்; அவர்க்கு - தேடச் சென்ற
அவ்வானர வீரர்க்கு; பிறிது உற்றுளது என்னை ? - வேறு என்ன
நேர்ந்துள்ளது ?; மாண்டுளார் கொலோ ? - இறந்து போயினார்களோ ?

     குறித்தகாலத்துக்குள், தென் திசை சென்றவர்கள் வராததனால்;
மாண்டுவிட்டனரோ என்று ஐயமுறுகின்றான் இராமபிரான். 'பிறிது' என்பது
எதுகை நோக்கி பிறித்து என நின்றது; செய்யுள் விகாரம்.             (17)