6025. | 'கண்டனர்அரக்கரை, கறுவு கைம்மிக, மண்டு அமர்தொடங்கினார், வஞ்சர் மாயையால் விண்தலம்அதனில் மேயினர்கொல் ? வேறு இலாத் தண்டல் இல்நெடுஞ் சிறைத் தளைப் பட்டார்கொலோ ? |
அரக்கரைக்கண்டனர் - (சீதையை எடுத்துச்சென்ற இராவணன் முதலிய) அரக்கர்களைப் பார்த்து; கறுவு கைம்மிக மண்டு அமர் தொடங்கினார் - கோபம் அதிகரிக்க, மிகுதியான போரைச் செய்யத் தொடங்கி; வஞ்சர் மாயையால் விண்தலம் அதனில் மேயினார் கொல் ? -வஞ்சகச் செயலுடைய அவ்வரக்கர்களின் மாயச் செயலால் (இறந்து) வீரசுவர்க்கத்தில் சென்று சேர்ந்தார்களோ ?; தண்டல் இல் நெடுஞ் சிறை தளைப்பட்டார் கொலோ ? - (எக்காலத்திலும்) நீங்குதல் இல்லாத பெரிய சிறையில் கட்டுப்பட்டார்களோ ? ஓ: அசை. (19) |