6028. | எய்தினன்அனுமனும்; எய்தி, ஏந்தல்தன் மொய் கழல்தொழுகிலன்; முளரி நீங்கிய தையலை நோக்கியதலையன், கையினன், வையகம் தழீஇநெடிது இறைஞ்சி, வாழ்த்தினான். |
அனுமனும்எய்தினன் - அனுமனும் அவ்விடத்தைஅடைந்தான்; எய்தி ஏந்தல் தன் மொய் கழல் தொழுகிலன் - வந்து சேர்ந்து பெருமையிற் சிறந்தவனான இராமபிரானது வலிய கழல் அணிந்த திருவடிகளை வணங்காதவனாய்; முளரி நீங்கிய தையலை நோக்கிய - தாமரை மலரை விட்டு நீங்கி (பூமியில் அவதரித்த) திருமகளாகிய பிராட்டியை, அவள் இருக்கும் தென் திசை நோக்கிய; தலையன் கையினன் - தலையையும் கைகளையும் உடையவனாய் (த்திரும்பி); வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் - நிலத்தைத் தழுவியது போன்று படிந்து நீட்சியாக நிலத்தில் கிடந்தபடியே வணங்கி, பிராட்டியை வாழ்த்தினான். சீதா பிராட்டிகற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கின்றாள் என்ற உண்மையை, இராமபிரான் முதலில் அறிந்து கொள்வதற்காக, அனுமன் தென் திசை நோக்கி வணங்கி, வாழ்த்தினான் என்க. மொய் - வலிமை; சீதை, திருமகளின் அவதாரம் என்பதை முளரி நீங்கிய தையல்' என்ற தொடர் காட்டுகின்றது. (22) |