செய்தி உணர்ந்தஇராமபிரான் மகிழ்தல் | 6029. | திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்; 'வண்டு உறைஓதியும் வலியள்; மற்று இவன் கண்டதும் உண்டு;அவள் கற்பும் நன்று' எனக் கொண்டனன்,குறிப்பினால் உணரும் கொள்கையான். |
குறிப்பினால்உணரும் கொள்கையான் - அவயவங்களின்குறிப்பைக் கொண்டு நடந்ததை நன்கு உணர்ந்து கொள்ளும் நுண்ணறிவினனான இராமபிரான்; திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் - மிக்க வலிமை உடைய அந்த அனுமனது செய்கையை நன்றாகப் பார்த்து அறிந்து; வண்டு உறை ஓதியும் வலியள் - வண்டுகள் தங்கும் கூந்தலை உடைய பிராட்டியும் நன்னிலையில் உறுதியுடன் இருக்கின்றாள்; இவன் கண்டதும் உண்டு - இவ்வனுமன் அவளை நேரில் பார்த்து வந்ததும் உண்டு; அவள் கற்பும் நன்று என கொண்டனன் - அவளது கற்பும் சிறப்புடையதாயிருக்கின்றது என்று ஊகித்துக் கொண்டான். அனுமன் தென் திசைநோக்கித் தொழுத செய்கையிலிருந்து, இராமபிரான்உணர்ந்து கொண்ட பிராட்டியின் நிலை பற்றிப் பேசப்பட்டது என்க. (23) |