பிராட்டியைக்கண்டதை அனுமன் இராமபிரானிடம் கூறுதல் 

6031.

'கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்'என்று, அனுமன் பன்னுவான்;

     அனுமன், அண்டர்நாயக - அனுமன் (இராமபிரானை நோக்கி)
தேவர்களுக்குத் தலைவனே!; தெண் திரை அலைகடல் இலங்கை தென்
நகர் -
தெளிவானவும் சுருளும் இயல்புடையனவுமான அலைகளோடு கூடிய
கடல் சூழ்ந்த இலங்கை என்ற சொல்லப் படுகின்ற தெற்கில் உள்ள நகரத்தில்;
கற்பினுக்கு அணியை கண்களால் கண்டனென் -
கற்பிற்கு ஒரு ஆபரணம்
போன்ற பிராட்டியை, என் கண்களாலேயே பார்த்தேன்; இனி ஐயமும் பண்டு
உள துயரும் துறத்தி -
இனிமேல், (பிராட்டி கற்புடையளோ, இலளோ) என்ற
சந்தேகத்தையும், இதுகாறும் கொண்டுள்ள துன்பங்களையும் நீக்குவாயாக';
என்று பன்னுவான் -
என்று தொகுத்துச் சொல்லி, மேலும் விரித்துக்
கூறுவானானான்.

     அனுமன், தான்பிராட்டியைக் கண்டதையும், அவன் கற்பின்
சிறப்பையும், பிராட்டியிருக்கும் இடத்தையும் இராமபிரானுக்குக் கூறினான்
என்பதாம். இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு சொற்களும், உணரும் தொறும்
உணரும் தொறும் கற்பார்க்கு இன்பம் பயப்பனவாகும். 'கண்டனென்' என்ற
சொல், 'த்ருஷ்டா ஸீதா' என்ற முதல் நூல் தொடரைத் தழுவியது. ஆனால்,
அடுத்துள்ள கற்பினுக்கு அணியை என்ற தொடர், 'ஸீதா' என்ற சொல்லைக்
காட்டிலும் ஆழ்ந்த, சிறந்த, நுணுக்கமான பொருளை உடையதாகும்.
'கண்டனென்' என்ற வினைச்சொல்லே கண்ணால் என்றும் கருவியைத் தரும்
ஆதலின், 'கண்களால்' என்பதைச் சீதையின் கண்களால் என்று கொண்டு

பொருள் செய்து. மேனிமுழுவதும் இளைத்து இருந்தமையால் இராமன் கூறிய
அடையாளங்களைக் கொண்டு சீதையை அறிய இயலவில்லை. உள்ளம்
காட்டும் கண்களால், அவன் கண்களில் நீ உள்ளமையால் அவளைச் சீதை
என்று அறிந்தேன் எனப் பொருள் உரைப்பது சிறந்தது.             (25)