6033. | 'பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என, பொறையி்ல் நின்றாள், தன் அலதுஇல்லைத் தன்னை ஒப்பு என; தனக்கு வந்த நி்ன் அலதுஇல்லை நின்னை ஒப்பு என, நினக்கு நேர்ந்தாள்; என் அலது இல்லைஎன்னை ஒப்பு என, எனக்கும் ஈந்தாள். |
பொன்னை ஒப்புபொன் இலது இல்லை - பொன்னை ஒத்திருக்கும் பொருள், பொன்னே அல்லது வேறு ஒன்றும் இல்லை; என - அதுபோல; தன்னை ஒப்பு தன் அலது இல்லை - தன்னை ஒத்திருப்பவள் தான் அல்லது வேறு ஒருத்தியில்லை; என, பொறையில் நின்றாள் - என்ற உலகத்தார் சொல்லும் வண்ணம் பொறுமைக் குணத்தில் தலை சிறந்து நின்றாள்; தனக்கு வந்த நின் அலது நின்னை ஒப்பு இல்லை என நினக்கு நேர்ந்தாள் - தனக்குக் கணவனாக வாய்த்த உன்னை அல்லாமல், உனக்கு ஒத்திருப்பவர் வேறு ஒருவரும் இல்லை என்ற புகழை உனக்குக் கொடுத்தாள்; என்னை ஒப்பு என் அலது இல்லை என, எனக்கும் ஈந்தாள் - என்னை ஒப்பவன் என்னை அல்லது வேறு ஒருவனும் இல்லை என்ற பெருமையை எளியேனாகிய எனக்கும் அளித்துள்ளாள். நின்றாள்,நேர்ந்தாள், ஈந்தாள் என்ற செயல்களின் மூலம் பிராட்டியின் பெருமையை அனுமன் உணர்த்தினான். பிராட்டியின் பொறுமைக் குணத்துக்கு, பொன் உவமை. பொன், தீயினால் உருக்கப்பட்டும், பின்பு தட்டப்பட்டும், சுடர் விட்டு ஒளிர்வதோடு, பிறர்க்கு அழகு தரும் ஆபரணமாகவும் இருந்து உதவுகிறது. அது போல், பிராட்டி இலங்கைச் சிறையில் துன்புற்றாலும், தானும் கற்புச் சிறப்பு விளங்குவதோடு, இராமபிரான், அனுமன் ஆகியோருக்கும் பெருமை நல்கி உள்ளான். 'பொறையின் நின்றாள்' என்பதை எழுவாயாகவும் கொள்ளலாம். (27) |