6036.

'கண்ணினும்உளை நீ; தையல் கருத்தினும் உளை
                                 நீ; வாயின்
எண்ணினும் உளைநீ; கொங்கை இணைக்
                       குவைதன்னின் ஓவாது
அண்ணல் வெங்காமன் எய்த அலர் அம்பு
                        தொளைத்த ஆறாப் 
புண்ணினும் உளைநீ; நின்னைப் பிரிந்தமை
                       பொருந்திற்று ஆமோ ?

     நீ, தையல்கண்ணினும் உளை - நீ, பிராட்டியின்கண்களிலும்
எப்பொழுதும் நீங்காது இருக்கின்றாய்; கருத்தினும் நீ உளை - அவள்
மனத்திலும் நீ தங்கியிருக்கின்றாய்; வாயின் எண்ணினும் நீ உளை - அவள்
வாயினின்றும் தோன்றும் ஒவ்வொரு சொற்களிலும் நீ இருக்கின்றாய்;
கொங்கை இணை
குவை தன்னில் அண்ணல்வெம் காமன் ஓவாது எய்த
-
இரண்டு தனங்களின் முகட்டிலும், பெருமையும் கொடுமையும் உடைய
மன்மதன் இடைவிடாமல் ஏவிய மலரம்புகள் தைத்து ஊடுருவிய ஆறாத
புண்களிலும் நீ தங்கியிருக்கின்றாய்; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று
ஆமோ ? -
(ஆதலால்) உன்னைப் பிரிந்திருக்கின்றாள் என்பது
பொருத்தமான செய்தி ஆகுமோ ? (ஆகாது)

     பிராட்டி, மனம்,மொழி, மெய் என்ற கரணங்களாலும் இராமபிரானைப்
பிரியாது இருக்கிறாள் என்பது கருத்து. கண்களில் இருத்தல் உரு வெளித்
தோற்றம்; வாயின் எண்ணின் இருத்தல் இராமநாமம் கூறுதல். கொங்கை.....
புண்ணில் இருத்தல் இராமனைத் தழுவும் பாவனை.                 (30)