6038.

'மண்ணொடும் கொண்டு போனான்-வான் உயர்
                   கற்பினாள்தன்
புண்ணிய மேனிதீண்ட அஞ்சுவான், உலகம் பூத்த
கண் அகன்கமலத்து அண்ணல், "கருத்திலாள்-
                   தொடுதல் கண்ணின்,
எண் அருங் கூறாய்மாய்தி" என்றது ஓர் மொழி
                    உண்டு என்பார்.

     கண் அகன்கமலத்து உலகம் பூத்த அண்ணல் - இடம் அகன்ற
திருமாலின் திரு உந்தித் தாமரை மலரில் தோன்றி உலகத்தைப் படைத்த
பிரமதேவன்; கருத்து இலாள் தொடுதல் கண்ணின் - (இராவணனை
நோக்கி)விருப்பம் இல்லாத பெண்ணை நீ வலிதாகத் தீண்டுதல்
செய்வையானால்; எண்அரும் கூறாய் மாய்தி - நினைப்பதற்கு அரிதான
கூறுகளாகப் பிளப்புண்டுஇறப்பாய்; என்றது ஓர் மொழி உண்டு என்பார் -
என்று இட்டதாகிய ஒருசாப வார்த்தை உண்டு என்று சொல்வார்கள்; வான்
உயர் கற்பினாள் தன்புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் -
(ஆதலால்
இராவணன்) மிகச்சிறந்த கற்பு நிலையை உடையவளான பிராட்டியினது
பரிசுத்தமானதிருமேனியைத்  தீண்டுவதற்கு அச்சம் உற்றவனாய்;
மண்ணொடும் கொண்டுபோனான் - நிலத்தோடு எடுத்துக் கொண்டு
போனான்.

     பிராட்டி, தூயசாலையில் இருப்பதற்கும், இராவணன் பிராட்டியைத்
தீண்டாமைக்கும் காரணம் கூறப்பட்டது. பிரமன் இராவணனுக்குச் சாபம் இட்ட
வரலாறு, திரிசடை மூலம் பிராட்டி அறிந்திருந்தாள். அது (கம்ப 5365)
பிராட்டியால் அனுமனுக்குத் தெரிவிக்கப்பட்டது.                   (32)