6039.

'தீண்டிலன்என்னும் வாய்மை-திசைமுகன் செய்த
                         முட்டை
கீண்டிலது;அனந்தன் உச்சி கிழிந்திலது; எழுந்து
                         வேலை
மீண்டில;சுடர்கள் யாவும் விழுந்தில; வேதம் செய்கை
மாண்டிலது;-என்னும் தன்மை வாய்மையால்,
                        உணர்தி மன்னோ !

     தீண்டிலன்என்னும் வாய்மை - பிராட்டியை இராவணன்
தொட்டானில்லை என்ற உண்மையை; திசை முகன் செய்த
முட்டை
கீண்டிலது -
பிரமன்படைத்த உலகம், பிளந்து போகவில்லை;
அனந்தன் உச்சி கிழிந்திலது -
ஆதிசேடனது தலைகளோடு கூடிய படம்
கிழிந்து போகவில்லை; வேலை எழுந்து மீண்டில - கடல்கள் பொங்கி மேல்
வந்தனவில்லை; சுடர்கள் யாவும் விழுந்தில - சூரியன் சந்திரன் முதலிய
ஒளியுள்ள நட்சத்திரங்கள் யாவும் கீழே விழுந்து அழியவில்லை; வேதம்
செய்கை மாண்டிலது -
வேதங்களும் அவற்றில் கூறப்பட்டுள்ள
ஒழுக்கங்களும் அழிந்தனவல்ல; என்னும் தன்மை வாய்மையால் உணர்தி -
என்கின்ற இத்தன்மை மெய்யாயிருத்தலை நோக்கி, (அதனால்) உணர்வாயாக.

     வாய்மை,வாய்மையால் உணர்தி' என இயையும், இராவணன்
பிராட்டியைத் தீண்டிலன் என்னும் வாய்மை கடல்கள் எழுந்து பொங்காமை
முதலியவற்றால் அறியக்கிடக்கும். பிராட்டியின் புனிதத் தன்மையால்தான்,
இயற்கை நிகழ்ச்சிகள் மாறுபடாமல் நிற்கின்றன என்று கூறப்பட்டது.      (33)