| 6040. | 'சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த மாகத்தார்தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப் பாகத்தாள்,இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத்தாளும், ஆகத்தாள்அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள். |
சோகத்தாள் ஆயநங்கை - (உன்னைப் பிரிந்த பெரும்) துக்கத்தை உடையவளான பிராட்டியின்; கற்பினால் மாகத்தார் தேவி மாரும் - கற்பின் சிறப்பால், வானில் உள்ள தேவர்களி்ன் மனைவிமார்களும்; தொழுதற்கு ஒத்த வான் சிறப்பு உற்றார் - யாவரும் வணங்குவதற்கு ஏற்ற பெரும்சிறப்பை அடைந்தார்; மற்றை ஈசன் பாகத்தாள் இப்போது மகுடத்தாள் - அதுவல்லாமல் சிவபிரானது உடம்பின் ஒரு பாகத்தில் இருக்கும் உமாதேவி, இந்த சமயத்தில் அப்பெருமானது தலைமேல் இருக்கும் சிறப்பினை உடையவளானாள்; பது மத்தாளும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும்; மாயன் ஆகத்தாள் அல்லன் - இனித் திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கத் தக்கவள் அல்லள் (அப்பெருமானது) ஆயிரம்திருமுடிகளின் மேலிருக்கத் தக்கவளாவாள். உயர்ந்தோர்ஒருவரால், மற்றையோரும் சிறப்படைவர் என்பதற்கிணங்க, பிராட்டியின் கற்புச் சிறப்பால், மற்றைத் தெய்வ மகளிர், உமாதேவி, திருமகள் முதலியோரும் சிறப்படைந்தனர் என்பதாம். சிறையிருந்தாள் ஏற்றத்தால் மாதர் குல ஏற்றம் சொல்லுகிறது இச்செய்யுள் என்கின்றான் கம்பன்; பரம வைஷ்ணவனாதலின், என்ற பிள்ளை லோகாசாரியர் வாக்கும் நோக்கத்தக்கது. (34) |