| 6043. | 'தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி, ஐய ! யான்இருந்த காலை, அலங்கல் வேல் இலங்கை வேந்தன் எய்தினன்;இரந்து கூறி இறைஞ்சினன்;இருந்து நங்கை வெய்து உரைசொல்ல, சீறி, கோறல் மேற்கொண்டு விட்டான். |
ஐய ! - ஐயனே !; தையலை வணங்கற்கு ஒத்த - பிராட்டியை, நான் எதிர் சென்று வணங்குவதற்குத் தகுதியான; இடை பெறும் தன்மை நோக்கி -சமயத்தைப் பெறும் நிலையை எதிர்பார்த்து; யான் இருந்த காலை - நான் இருந்த பொழுது; அலங்கல் வேல் இலங்கை வேந்தன் எய்தினன்- மாலை அணிந்த வேற்படை ஏந்திய இலங்கை மன்னனாகிய இராவணன் அங்கு வந்து; இரந்து கூறி இறைஞ்சினன் - (தன்னை விரும்பும்படி) இரக்கத்தோடு பலவிதமான வார்த்தைகளைச் சொல்லி, பிராட்டியை வணங்கினான்; நங்கை இருந்து வெய்து உரை சொல்ல - பிராட்டி நில்லாது, இருந்து கொண்டே கடுமையான வார்த்தைகளைக் கூற; சீறி கோறல் மேற் கொண்டு விட்டான் - (அதைக் கேட்ட அவன்) கோபித்து, பிராட்டியைக் கொல்லத்தலைப்பட்டு விட்டான். பிராட்டியின்கற்புத் திண்மையைத் தான் நேரில் காண்பதற்கு நிகழ்ந்த சந்தர்ப்பத்தை, இதன் மூலம் விளக்கினான் அனுமன் என்க. (37) |