சூடாமணி பெற்றஇராமபிரான் நிலை

6053.

பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து
                             பொங்கி,
மெய்யுறவெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை
                            விட்டான்;
ஐயனுக்கு, அங்கி,முன்னர், அங்கையால் பற்றும்
                            நங்கை
கை எனல் ஆயிற்றுஅன்றே-கை புக்க மணியின்
                            காட்சி !

     கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச்
சூடாமணியின் தோற்றம்; ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த
இராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்;
அம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால்
பிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்) பயந்த
காமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி -
(அதனால்) உண்டான
ஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; மெய் உற
வெதும்பி -
உடல் நன்றாய் வெப்பமுற்று; உள்ளம் மெலிவுறும் நிலையை
விட்டான் -
மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான்.

     சூடாமணியைஇராமபிரான் தன் கையில் கொண்டமை, தன்
திருமணக்காலத்தில் பிராட்டியின் கையைப் பற்றியது போன்றிருந்தது.
அம்மகிழ்ச்சியினால், ஆசையால் வளர்ந்த மனத் துன்பம் நீங்கிற்று என்பதாம்.
                                                         (47)