பக்கம் எண் :

பக்கம் எண் :194

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை
 

வீழ்த்து - பெரிய பாயை மணிபல்லவத்தின்கண் இறக்கி, தங்கியது ஒரு நாள் - கப்பல் ஒரு நாள் தங்கியது, தான் ஆங்கு இழிந்தனன் - ஆபுத்திரன் அவ்விடத்தில் இறங்கினான் ;

ஆணையின் பெறாது என்க. குமரி மூத்த - ஒரு கன்னி கணவனின்றி மூத்தாற் போன்ற. கொடுப்போரும் கொழுநனுமே யன்றித் தானும் பயனிழந்து கழிந்த குமரியை உவமை கூறினமையின், தானும் ஏற்பாருமே யன்றிப் பாத்திரமும் பயனின்றிக் கழிந்த தென்றவாறாயிற்று ; 1"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிக நலம், பெற்றாள் தமியள்மூத்தற்று" என்பது ஈண்டு அறியற்பாலது. அங்கு அந்நாடு : ஒருசொல் நீர்மைய. மால் - பெரிய. இதை - கப்பற்பாய். கப்பல் ஒரு நாள் இதை வீழ்த்து மணிபல்லவத்திடைத் தங்கியதென்க. வீழ்த்து என்னும் செலுத்துவோன் வினை நாவாய்மேல் ஏற்றிக் கூறப்பட்டது ; பின் இதை யெடுத்து என்பதும் இது.

83--90. இழிந்தோன் ஏறினன் என்று - இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கலத்தில் ஏறினன் என நினைந்து, இதை எடுத்து வழங்கு நீர் வங்கம் வல்லிருள் போதலும் - பாய் உயர்த்தி மரக்கலம் கடலில் இரவிலே செல்லலும், வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி - ஆபுத்திரன் மரக்கலம் சென்ற பின்னர் மிக்க துன்பத்தையடைந்து, அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் - அம் மணி பல்லவத்தில் வாழ்வோர்கள் ஒருவரும் இல்லாமையால், மன்னுயிர் ஓம்பும் இம் மாபெரும் பாத்திரம் - பல உயிர்களைப் பாதுகாக்கும் இப் பெருமை பொருந்திய கலத்தினை வறிதே வைத்துக்கொண்டு, என் உயிர் ஓம்புதல் யானோ பொறேன் - என்னுயிரைக் காப்பதையான் பொறுக்ககில்லேன், தவம்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் - இப் பாத்திரத்தைப் பெற்றுப்பல  உயிர்களைக் காக்குமாறு முற்செய் தவம் நீங்கியதனால் ஒப்பற்ற துயரத்தால் வருந்துதலுற்றேன், சுமந்து என் பாத்திரம் என்றனன் - ஏற்போரில்லாத இவ்விடத்தில் இப் பாத்திரத்தை யான் சுமத்தலால் வரும் பயன் யாது என்றெண்ணியவனாய் ;

பாத்திரம் என்னுயிர் மாத்திரை ஓம்புதலை யென்றும், பாத்திரத்தால் ஓம்புதலை யென்றும் உரைத்தலுமாம்.

90--5. தொழுது - அதனை வணங்கி, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியில் - நிறைந்த நீரினையுடைய கோமுகி என்னும் பொய்கையில், ஓரியாண்டு ஒருநாள் தோன்றென விடுவோன் - ஓராண்டிற்கு ஒரு நாள் வெளியே தோன்றுவாயாக என்று கூறி விடுகின்றவன், அருளறம் பூண்டாங்கு ஆருயிர் ஓம்புநர் உளரெனில் - அருளாகிய அறத்தை மேற்கொண்டு அரிய உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின், அவர்கைப் புகுவாய் என்று - அவர் கைப்புகுவாய்


1 குறள். 1007.