பக்கம் எண் :

பக்கம் எண் :239

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

கூறினமையானும், 1 "போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த, மாதவி தன்றுறவுங்   கேட்டாயோ தோழீ" என்பதனாலும் அறிக. பேரூர்-பேரூரில். இது-மணிமேகலை பிக்குணிக்   கோலம் பூண்டு பிச்சை யேற்கின்றாள் என்னும் உரை. தக்கு-தக்கது: விகாரம். தக்கென்போர் -   தகவுடைமையை அறிந்து கூறும் அறிஞர். முளியெரி - காய்ந்த விறகிற் பற்றிய தீ யென்றுமாம்.

15--24.   பலர் தம் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே - பலருடைய கையதாகிய உணவையுண்டு வாழ்தலாகிய உரிமையையுடையேம்; பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் யாழினம் போலும் இயல்பினம்-பாணனிறந்தவிடத்து உடனிறக்குந்தன்மையில்லாத யாழைப் போன்ற இயல்புடையோம்: அன்றியும்-அஃதன்றியும், நறுந்தாது உண்டு நயன் இல் காலை-மணமுள்ள மகரந்தத்தை நுகர்ந்து பசையாகிய தேன் இல்லாதபொழுது, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் - வறிதாகிய பூவை விட்டு நீங்கும் வண்டினையும் போல்வேம்; வினை ஒழி காலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்-மற்றும் நல்வினை நீங்கும் காலத்துத் திருமகளைப் போன்றேம் ஆகி ஆடவரை விட்டு நீங்குவேம்; தாபதக் கோலம் தாங்கினம் என்பது - பிக்குணிக் கோலம் பூண்டேம் என்பது, யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே - யாவரும் நகைக்கும் இயல்பையுடைய தல்லவோ ;

நாடகக் கணிகையாதலின் பாண்மகனையும் யாழையும் உவமை கூறினாளென்க. நயன் இல் காலை - ஆடவரிடத்துச் செல்வமில்லாத காலத்தில் என்றுமாம். "வண்டிற் றுறக்குங்கொண்டி மகளிரை" என இக் காதை
யிற் பின்பும் கூறப்பட்டுள்ளது; மதுரைக் காஞ்சி யுள்ளும் 2 "இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி, நுண்டா துண்டு வறும்பூத் துறக்கும், மென்சிறை வண்டின மான" என இவ் வுவமை வந்துள்ளமை அறியற்பாலது. வினை - நல்வினை. திருவின் செல்வி-திருவாகிய செல்வி. நல்வினை யுலந்த பொழுது திருமகள் நீங்குவது போலும் என்னும் இவ் வுவமை 3 "தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப், பயந்தீர் மருங்கிற் பற்றுவிட் டொரீஇ" எனப் பெருங் கதையுள் வருதல்அறிந்து இன்புறற்பாலது. தாபதக்கோலம் - தவக்கோலம்.

25--32.   மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி - மாதவி பெற்ற மணிமேகலையாகிய பூங்கொடி, போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய-பூக்கும் பருவ மடைதலை விரும்பிய, உதயகுமரனாம் உலகாள் வண்டின்-உதயகுமரன் என்னும் உலகினையாள்கின்ற வண்டினது, சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த-வேறொன்றாலும் அழியாத மனமானது நன்றாக அருந்துமாறு, கைக்கொண்டு - மணிமேகலையைக்

1 சிலப். 26: ''காதலன்றன்.'' 2 மதுரைக். 572-4. 3 பெருங்கதை 1, 35: 137-8.