|
துன்புறுதலும் இறந்தோர் மீண்டும் பிறத்தலும் உண்மையே என்று மயக்கத்தினை
விடுவாயாக ;
வாய் - உண்மை. இதனை முன்னர்க்கூட்டி,
அயர்ந்தொழியாயாய் வாயே யென்று கூறி அவன் மயக்கத்தை யொழிப்பாய் என்றுரைத்தலுமாம்.
115--8.
வழுவறு மரனும் மண்ணும் கல்லும்-குற்றமற்ற மரம் மண் கல் என்பனவும்,
எழுதிய பாவையும் - எழுதப்பட்ட பாவையும், பேசா என்பது - பேசமாட்டா என்பதனை,
அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ-அறிதலும் செய்தியோ அன்றி அறியாயோ,
அறியாய் ஆயின் ஆங்கது கேளாய்-அறிகின்றிலையானால் அதனைக் கூறுவேன் கேட்பாயாக
;
வழுவறுதலாவது இயற்கையினின்று மாறாமை. கந்திடத்துள்ள
பாவையாகிய தான் பேசுதல் கேட்டலின் மரம் மண் கல் பாவையென்பன பேசுமென்னுங்
கருத்தினளாதலுங் கூடுமெனக் கொண்டு, அவை பேசுவன வல்லவெனத் தெய்வம் தெருட்டலுற்றதென்க.
119--28.
முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்-முடியவளர்ந்த சிறப்பினையுடைய பழைய நகரெங்கும்,
கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்-கொடி யணிந்த தேரோடும் வீதிகளிலும்
கடவுளர் கோயில்களிலும், முதுமர இடங்களும் முதுநீர்த்துறைகளும் - பழைய மரங்கள்
நிற்கின்ற இடங்களிலும் பழைய நீர்த் துறைகளிலும், பொதியிலும் மன்றமும் பொருந்துபு
நாடி-அம்பலங்களிலும் ஊர் நடுவாகிய மரத்தடிகளிலும் பொருந்துமாறு ஆராய்ந்து,
காப்புடை மா நகர்க் காவலும் கண்ணி - காவலுள்ள பெரிய நகரத்தின் காவலையும்
கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து - அறிஞர்கள் உறுதியுடையதாக எண்ணி,
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-, கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
- கருதிய தெய்வத்தை நிறுத்துவோர் அமைக்க, ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா
- அங்ஙனம் வகுக்கப்பட்ட தெய்வங்கள் அவ்விடத்தை விட்டு நீங்காவாய், ஊன்
கணினார்கட்கு உற்றதை உழைக்கும்-ஊன்கணுடைய மானிடர்க்கு நிகழ்ந்தனை உரைக்கும்
;
முடித்து
- முற்றுப்பெற்று; முடியவெனத் திரிக்க; காப்புடை - மதில் முதலியவற்றின் காவலையுடைய.
நகர்க்காவல் - நகரில் வாழ்வாரைப் பாதுகாத்தல். அறிந்தோராகிய காட்டுநர்
வலித்து வகுக்கவென்க. காட்டுநர் - நிறுவுவோர் ; பிரதிட்டை செய்வோர். நீங்கா- நீங்காவாய் : வினையெச்சமுற்று. ஊன்கணினார் என்பதனால் ஞானக் கண்ணில்லாதவ
ரென்பது அருத்தாபத்தியாற் பெற்றாம். உற்றது என்றதனால் இனம்பற்றி உறுவதுங்கொள்க.
மக்கட்கு முன் நிகழ்ந்தவற்றையும் பின் நிகழ்வனவற்றையும் உரைக்கு மென்க.
எனவே
|