பக்கம் எண் :

பக்கம் எண் :332

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை

மேல், ''தன்மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று'' என வருதற் கேற்ப, ''குடிபுறங்காத்தும்'' எனப் பாடம் கொண்டாம்.

17--20. தன் மண்காத்தன்று பிறர் மண்கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது-நின் புதல்வ னிறந்தது தன் நிலத்தைக் காத்தமையாலன்று பகைவர் நிலத்தைக் கொண்டமையாலுமன்று காமத்தால் நிகழ்ந்த அவ்விறப்பு யாதென்று கூறப்படும், மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பங் கொள்ளேல் என்று அவள் போயபின் - உயிர்ப் பன்மைகளைக் காக்கின்ற அரசன் முன்னர்த் துன்பம் கொள்ளாதே என வுரைத்து வாசந்தவை சென்றபின்னர் ;

காமத்தால் என்பது வருவித்துரைக்கப்பட்டது. எனனெனப்படும் --எத்தகையதென்று கூறப்படும்; இக்குடிப் பிறந்தோர்க்கு ஏலாத இழிவுடைய தென்றபடி. அவள் துன்புறுதல் அரசற்கு வருத்தத்தைச் செய்யுமாகலின் ''மன்பதை காக்கு மன்னவன்றன்முன், துன்பங் கொள்ளேல்'' என்றாள்.

21--30. கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி-செயலறவினையுடைய உள்ளத்தை மறைத்து அடக்கி, பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறமறைத்து - பொய்ந்நெறிக்கண் ஒழுகுதலைக்கொண்டு அதனைப் புறத்தே தோன்றாமல் மறைத்து, வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று-மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன் என்று கருதி, அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெருந்தேவி, அரசனுக்கு ஒரு நாள் - ஒரு நாள், அரசன் பால், பிறர் பின் செல்லாப் பிக்குணிக்கோலத்து-மற்றையோர் பின்னே செல்லாத பிக்குணி வடிவத்தைக் கண்டு, அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன் - அறிவு வேறுபட்ட உதயகுமரன் அரசாளும் தகுதியில்லாதவன், கரும்புடைத் தடக்கைக் காமன் கையற - கரும்பு வில்லையுடைய பெரிய கையையுடைய காமன் செயலறுமாறு, அரும் பெறல் இளமை பெரும் பிறிதாக்கும்-பெறுதற் கரிய இளமைப் பருவத்தைப் பயன்படாது கெடச் செய்த, அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு - நல்லறிவு நேர்பட்ட மணிமேகலைக்கு, சிறை தக்கன்று செங்கோல் வேந்து என - செங்கோல் வேந்தே சிறை தக்கதன்று என மொழிய ;

கையாற்றுள்ளம் - புதல்வ னிறந்த துயருடன் கூடிய உள்ளம். தனது தீய எண்ணம் புறந்தோன்றாம் மறைத்தென்க. பிறர் பின் செல்லா-ஆடவர் விரும்பிப் பின் செல்லலாகாத, இவளால் முனிவருள்ளிட்ட பகையை வெல்லக் கருதியிருந்தானாகலின் காமன் கையறுவானென்க; 1"உருவிலான னொருபெருஞ் சிலையொடு, விரைமலர் வாளி வெறுநிலத் தெறிய...; அறம்படுத்தனள்" என்பதுங் காண்க. பெரும் பிறிதாக்கல் - கெடுத்தல். தக்கதன்று என்பது விகாரப்பட்டது.


1 சிலப். 30: 25-8