பக்கம் எண் :

பக்கம் எண் :9

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 

58--59. தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் - குளிர்ந்த
        மணலையுடைய பந்தர்களிலும பலரும் தங்கும் அம்பலங்
        களிலுப், புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் -
        நன்றாகிய அறவுரையை அறிவீர் சேருமீன் ;

மணப்பந்தர் என்னும் பாடத்திற்கு மணத்தையுடைய தண்ணீர்ப் பந்தர் என்க. தாழ்தல் -தங்குதல். புண்ணிய நல்லுரை - தருமபதம். பொருந்துமின் - பொருந்தி உரைமின் என்று கொள்க.

60--61. ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் - தம்தம் சமயத்திற்
        பொருந்திய பொருள்களைக் குறித்துச் சபதஞ்செய்து வாதிக்கும்
        சமயவாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து எறுமின்-
        வித்தியா மண்டபத்தில் உரிய இடங்களில் அமர்வீர் ;

ஒட்டல்-சபதஞ் செய்தல், பொருள்-தத்துவம். பட்டிமண்டபம்- கலை யாராய்தற்கும், வாது புரிதற்குமுரிய மண்டபம் ; 1 "பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்" 2 "பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்" என்பன காண்க. ஓலக்க மண்டபமென்றும் கூறுவர். 3 "பட்டி மண்டப மேற்றினை யேற்றினை" என்பது திருவாசகம்.

62--63. பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்-பகைவரோடாயினும்,
        செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் - சினமும் போரும்
        செய்யாது நீங்குமின் ;

செற்றம் - நெடுங்கால நிற்கும் கோபம்; வயிரம்.

64--67. வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற்குன்றுகளிலும்,
        விரிபூஞ் சோலையும் - பரந்த மலர்ப் பொழில்களிலும், தண்
        மணல் துருத்தியும் - குளிர்ந்த மணலையுடைய யாற்றிடைக்
        குறைகளிலும், தாழ் பூந்துறைகளும் -ஆழ்ந்த பொலிவினையுடைய
        நீர்த் துறைகளிலும், தேவரும் மக்களும் ஒத்து உடன்திரிதரும்
        நாலேழ் நாளினும் - தேவரும் மக்களும் வேற்றுமையின்றிச்
        சேர்ந்துலாவும் இருபத்தெட்டு நாட்களிலும், நன்கு அறிந்தீர்
        என - இவற்றை நன்கு அறிந்தீராய் என்று ;

அறிந்தீர் : அறிந்தீராகியென வினையெச்சமாக்குக.

68--72. ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் களிறும் குழ்தர -
        விளங்குகின்ற வாளினையுடைய வீரரும் தேரும் குதிரையும்
        யானையும் சூழ்ந்துவர, கண் முரசு இயம்பி-முகத்தையுடைய
        முரசத்தினை அடித்து, பசியும் பிணியும் பகையும் நீங்கி -
        மக்கள்பால் பசியும் நோயும் பகைமையும் நீங்கி, வசியும்
        வளனும் சுரக்க என வாழ்த்தி-நாட்டிலே மழையும் வளமும்
        பெருகுக என்று வாழ்த்தி,
  


1 சிலப். 5 : 102.   2 கம்ப. நகர. 62. 3 திருவாசகம், சதகம், 49.