பக்கம் எண் :

பக்கம் எண் :19

Manimegalai-Book Content
2. ஊரலருரைத்த காதை

என்னும் நான்கு வாய்மையும் முறையே கூறப்பட்டன; 1 "துன்பந் தோற்றம் பற்றே காரணம், இன்பம் வீடே பற்றிலி காரணம், ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது," என்பதுங் காண்க. சீலம் ஐந்தனையும், 2 "கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையுங், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" என்பதனானறிக. உய்வகை இவை என்றமையால் வீட்டைவார்க்கு வாய்மையும் சீலமும் இன்றியமையாதன வென்ப தாயிற்று,. உரவோன் அருளினன் ஆதலால் யாம் தவநெறி நிற்றற்கே யுரியம் என விரித்துரைக்க.

70--5.

மைத்தடங் கண்ணார் தமக்கும்-மையணிந்த பெரிய கண்களை
யுடைய நம் ஆயத்தார்க்கும், எற் பயந்த சித்தராபதிக்கும்
செப்புநீ என-என்னைப் பெற்ற சித்திராபதிக்கும் இச்செய்தியை
நீ கூறுவாயாக என உரைக்க, ஆங்கவள் உரை கேட்டு-அவள்
கூறிய மொழியைக்கேட்டு, அரும்பெறல் மாமணி ஓங்குதிரைப்
பெருங்கடல் வீழ்த்தோர் போன்று-பெறற்கரிய பெருமை
பொருந்திய மாணிக்கத்தை மிகுந்த அலைகளையுடைய பெரிய
கடலில் வீழ்த்தியவர்களை ஒத்து, மையல் நெஞ்சமோடு-மயக்
கமுற்றஉள்ளத்துடன் வயந்த மாலையும் கையற்றுப் பெயர்ந்
தனள் காரிகைதிறத்து-வயந்தமாலையும் மாதவி யிடத்தினின்றும்,
செயலற்று மீண்டனள் என்க.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையின் துறவைக்குறிக்குமிடத்து, 3 "ஆங்கது கேட்ட வரசனு நகரமும், ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர், தம்மிற் றுன்பர் தாநனி யெய்த" என்று கூறியிருப்பது அறியற் பாலது.

நன்னாளில் மணிமேகலையொடு மாதவி வாராத் துன்பம் மேல்வரச் சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரினை மாதவிக் குரையென்று கூற, அவன் மாதவியிருந்த மண்டபத்துச் சென்று கண்டு வருந்தி, பண்பில் வாய்மொழி நயம் பாடில்லை, நாணுடைத்து என்ன, அது கேட்ட மாதவி, நாணுத் துறந்தேன்; மணிமேகலை தீத்தொழிற் படாள்; உரவோன் அறிகென் றருளிக் காட்டி, இவற்றைக் கொள்ளென் றருளினன்; இதனை நீ செப்பென்று சொல்ல, வயந்தமாலையும் கேட்டுக் கையற்றுப் பெயர்ந்தனள் என முடிக்க.

ஊரலருரைத்த காதை முற்றிற்று.


1 மணி. 3 : 186-8. 2 மணி. 24 : 77-8. 3 சிலப். 30 : 29-31.