[காஞ்சிமாநகர்க்கண் அறவணவடிகளையும் மாதவி
சுதமதியாகிய இருவரையுங் கண்டு மகிழ்ந்த மணிமேகலை, அறவணனை வணங்கி ''''அற முரைத்தருள்க''''
வென வேண்டினள். அறவணன் அவளை வாழ்த்தி, காவரிப்பூம்பட்டினம் கடல் கோட்படுதற்குக்
காரணம் நெடுமுடிக் கிள்ளி மகனையிழந்த துயரத்தால் இந்திரவிழாவைக் கைவிட்டானாக,
இந்திரன் சினந்திட்ட சாபமென்றும் மணிமேகலாதெய்வம் அவன் சாபத்தோடொப்ப
இட்ட சாபமென்றும் கூறினான். அவள் இச்செய்திகளைத் தான் முன்பே தீவதிலகைபாற்
கேட்டறிந்ததாகத் தெரிவித்துத் தான் சமயக்கணக்கர் தம் திறம் கேட்டதும்,
அச்சமயங்களைச் சிந்தையிற் கொள்ளாதொழிந்ததும், வேற்றுரு நீங்கி இயற்கையுரு
வெய்தியதும் எடுத்தோதி, மெய்ப்பொருள் அருளுக வென அறவணனை மறுபடியும் வணங்கினாள்.
ஆதிசினேந்திரன் அருளிய அளவைகள், பிரத்தியக்கம் அனுமானம் என்ற இரண்டேயாம்;
பிரத்தியக்கமாவது சுட்டுணர்வு; அனுமானம்; காரணம் காரியம் சாமானியம் என மூவகை
யாகக் கூறப்படுமாயினும் காரியானுமானமே பிழையில்லாதது ; இது பக்கம், ஏது, திட்டாந்தம்,
உபநயம், நிகமனமென ஐந்துறுப்புக்களை யுடையது; எனினும், இறுதியிற் கூறிய உபநயம்,
நிகமனம் இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும்; எஞ்சி நின்ற பக்கம், ஏது,
திட்டாந்தம் என்ற மூன்றனுள் திட்டாந்தம்: சாதன்மியம், வைதன்மியம் என
இரு வகைப்படும்; குற்றமில்லாத பக்க முதலியன, நன்பக்கம், நல்லேது. நல்ல திட்டாந்தம்
எனவரும்; குற்ற முடையவை பக்கப்போலி ஏதுப் போலி திட்டாந்தப் போலி எனப்படும்;
பக்கபோலி பிரத்தியக்க விருத்த முதலாக ஒன்பது வகையும், வைதன்மிய திட்டாந்தப்
போலி ஏதுப்போலி அசித்தம் அநைகாந்திகம் விருத்தமென மூவகையும், சாதன்மிய
திட்டாந்தப் போலி சாதன தன்ம விகல முதலாக ஐவகையும், சாத்தியா வியாவிருத்தி
முதலாக ஐவகையுமாம். இவற்றுள் தீயவற்றாற் காட்டப்படுவனவற்றை யாராய்ந்து மெய்ப்பொருளைஐயமின்றி
அறிந்துகொள்க என அறவணன் உரைத்தான்.
இதன்கண் காவரிப்பூம்பட்டினம் கடல்கோட்
படுதற்குறிய காரணம் 2-36 அடிகளிலும், பிரத்தியக்க அளவை 46-51 அடிகளிலும்,
அனுமானம் 52-56 அடிகளிலும், பக்க முதலிய உறுப்புக்கள் 57-110 அடிகளிலும், நன்பக்கம்
முதலிய மூன்றும் 111-142 அடிகளிலும், பக்கப்போலி 143-190 அடிகளிலும், ஏதுப்போலி
191-324 அடிகளிலும், திட்டாந்தப் போலி 325-468 அடிகளிலும் உரைக்கப் படுகின்றன.
இறைஞ்சிய விளங்கொடி தன்னை வாழ்த்தி
அறந்திகழ் நாவி னறவண ணுரைப்போன்
|