பக்கம் எண் :

பக்கம் எண் :28

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
  உண்டோ - பாவையனையாளை ஆடவர் காணின் விட்டு நீங்குதலும் உண்டோ?, பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் - அங்ஙனம் தம் இயற்கை திரியாமல் நிற்பரேல் அவர்தாம் பேடியர் அல்லரோ ;
ஆய்-ஆராய்ந்தெடுத்த என்றுமாம். 1 "ஆவின் கடைமணி யுகுநீர்" என்பது ஈண்டு அறியற்பாலது. அவளாற்பகை வெல்லக் கருதியிருந்த காமன் இனி வெல்லுதலரிதென்று படையை ஏறிந்து நடுங்குவா னென்க. உண்டோ, ஓ ; எதிர்மறை. பெற்றி - இயல்பு. பெற்றியில் நிற்றலாவது - இவளை விரும்பாது நிற்றல். ஆடவர் என்றது ஈண்டு இன்பத்துறை நிற்பாரைக் கருதிற்று. பேடியர் - பெண்ணின்பம் துய்க்குந் தகுதியில்லாதவர்.

26-27. ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், அணியிழை கேளாய் ஈங்கு இந்நகரத்து யான் வருங் காரணம் - இந்நகரத்தின்கண் யான் வந்த காரணத்தை மாதவி கேட்பாயாக ;

ஆங்ஙனம் : சுட்டு. ஈங்கு : அசை.

28-32. பாராவாரம் பல்வளம் பழுநிய-கடல் தரும் பல வளங்களும் முதிர்ந்த, காராளர் சண்பையில் - காராளருடைய சண்பை நகரத்தில், கௌசிகன் என்போன் இரு பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-கௌசிகன் என்னும் அந்தணனுக்கு ஒரே மகளாயுள்ளயான், ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு - தன்னந்தனியே செல்வதனை அஞ்சாமல் ஒன்றையும் ஆராயாத உள்ளத்தோடு, ஆராமத்திடை அலர் கொய்வேன்தனை-உப வனத்திலே மலர் கொய்வேனாயினேன் ; அங்ஙனம் கொய்த என்னை ;

பாராவாரப் பல்வளம் என்பது மெலிந்து நின்றது. காராளர்-ஓர் சாதியார் ; வேளாளருமாம். சண்பை - ஒரு நகரம் ; சீகாழியுமாம்.

33-41. மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் - மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன், திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த - திருமகளும் விரும்பும் இக் காவிரிப்பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற, பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் - பெரிய விழாவினைக் காணும் நினைவுடன் வருகின்றவனாகிய, தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - பூமாலையை யுடையவனும் மணிமாலையையுடையவனும் பொற் பூணினை யுடையவனும் பூமியிலுள்ளோர், காணலாகாத பலருந் தொழும் தெய்வ வடிவினை யுடையவனுமாகிய அவன், எடுத்தனன் எற்கொண்டு எழுந்தனன் விசும்பில் படுத்தனன் - என்னை எடுத்துக் கொண்டு விசும்பில் எழுந்து அகப்படுத்திக்கொண்டான் ; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் - அப்பொழுது யான் அவனுடைய இன்பத்தின் பகுதியை யுடையே.

1 சிலப், 20 : 54.