[தருமம் கேட்கப்புக்க மணிமேகலைக்கு மெய்ப்பொருளைத்
தேர்ந்துணர்தற்கு வேண்டும் அளவைகளையும், அவற்றுள் தீயவற்றை நீக்கித் தூயவற்றால்
பொருளின் மெய்ம்மைத் தன்மையை ஐயமின்றி அறியும் திறத்தையும் அறிவுறுத்த
அறவண அடிகள், மேலும் கூறற்குரிய அறங்களைக் கூறச் சமைந்தார். மணிமேகலையும்
புத்த தன்ம சங்கமென்னும் மும்மணிகளையும் மும்மையின் வணங்கிப் புத்த தருமத்தைச்
சரண்புகுந்தாள். அமரர் வேண்டுகோட்கிரங்கித் துடித லோகத்தினின்றும் தோன்றி,
போதிமூலத்திருந்த வாமன் உரைத்த திருவறத்தை அவற்குப் பிற்போந்த எண்ணிலரான
புத்தர்கள் வழிவழியாக வுரைத்துப் போந்தனர்; அதனை உனக்குரைப்பேன் என அறவணடிகள்
உரைக்கத் தொடங்கி, பன்னிரு நிதானங்களும், அவற்றின் மண்டிலவகையும், கண்ட
வகையும், சந்தி வகையும், தோற்ற வகையும், கால வகையும், பிறவும் தொகுத்தும்
விரித்தும் கூறினார். பின்பு, நால்வகை வாய்மையும், ஐவகைக் கந்தமும், அறுவகை
வழக்கும், நால்வகை நயங்களும், வினாவிடைகளும் விரித்து விளங்கக் கூறினார்.
முடிவில் கட்டும் வீடும் ஒவ்வொன்றன் காரணமும் அவரவர் முயற்சியால் விளையுமேயன்றிப்
பிறராற் றரப்படுமாறில்லை யென்பதை வற்புறுத்தி, இறுதியாக, மேலே கூறிய பொருள்
எல்லாவற்றிற்கும் காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்றுமே காரணமென்றும், காமத்தை
அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத் தனித்துப் பார்த்துப் பற்றறுக்கும்
அசுப பாவனையால் கெடுத்தல் வேண்டுமென்றும், வெகுளியை மைத்திரி பாவனை, கருணா
பாவனை, முதித பாவனைகளால் கெடுத்தல் வேண்டுமென்றும், மயக்கத்தை ஞான நூற்பொருளைக்
கேட்டல் சிந்தித்தல் பாவனை தரிசனையெனவரும் உபேக்ஷா பாவனையால் கெடுத்தல்
வேண்டுமென்றும் அறிவுறுத்தினாராக, மணிமேகலையும் அவர் காட்டிய ஞானவிளக்கின்
துணை கொண்டு தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுப்பேனென நோற்கலானாள்.
இதன்கண் மணிமேகலை சரண்புகுதல் 1-5 அடிகளிலும், அறவணன் புத்த தருமத்தைத் தொகுத்துரைக்குந்திறம்
6-44 அடிகளிலும், பன்னிருநிதானங்களின் இயல் 45-133 அடிகளிலும், கண்டவியல்
134-147 அடிகளிலும், சந்தியியல் 148-152 அடிகளிலும், பிறப்பியல் 153-158
அடிகளிலும், காலவியல் 159-166 அடிகளிலும், குற்றவியல்பும் வீட்டியல்பும் 167-178
அடிகளிலும், நால்வகை வாய்மைகள் 179-188 அடிகளிலும், ஐந்கந்தங்கள் 189-190
அடிகளிலும், வழக்கியல் 191-216 அடிகளிலும், நால்வகை நயங்களும் பயனும் 217-235
அடிகளிலும், வினாவிடை 236-249 அடிகளிலும், நால்வகைப் பாவனைகள் 250-290
அடிகளிலும்,மணிமேகலை நோற்றலைத் தலைப்பட்டது 263-4 அடிகளிலும் கூறப்படுகின்றன.]
|