பக்கம் எண் :

பக்கம் எண் :53

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை

  காண்பனகாண் - அரங்கில் மயில்கள் ஆடுவதைக் காண்பனவாகிய மந்திகளைக் காண்பாயாக ;

பரிதியாகிய செல்வன் என்க. தானைக்கு-தானையால், ஞாயிற்றின்
கதிரால் துரத்தப்பட்ட உலகினிருளெல்லாம் புகுந்திருந்தாற் போலும் இருட்சியையுடைய பொழில் என்க. மருள்-மருட்கை; வியப்பு. தும்பி - வண்டின் ஓர் கிளை. 1"கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப், பொங்கர் வண்டின நல்லியாழ் செய்ய" எனப் பின்னரும் வருதல் காண்க. இலை களின் செறிவாலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்காவென்க ; 2"வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்" என்பது பெரும்பாண். காண்பன : காண்டல் எனத் தொழிற் பெயருமாம்.

7--13. மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சி-மறுவற்றுத் தெளிந்த பளிங்குபோலும் நீரினுடைய பொய்கையில், பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று-பசிய இலைகளின் பரப்பின்கணுள்ள பல மலர்களினிடையே நின்றும், ஒரு தனி ஓங்கிய விரை மலர்த்
தாமரை - தனியே உயர்ந்து விளங்கிய மணம் மிக்க ஒரு தாமரை மலரில், அரச அன்னம் ஆங்கினிது இருப்ப - அன்னப் புள் இனிதாக அரசு வீற்றிருப்ப, கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு - அவ்விலஞ்சியின் கரையில் நின்று அரசன் முன் ஆடும் மெல்லியல் போல ஆடுகின்ற ஒப்பற்ற அழகினையுடைய மயிலுக்கு, கம்புட் சேவல் கனைகுரல் முழவா - சம்பங் கோழிச் சேவலினது மிக்க குரல் முழவொலியாக, கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் - கிளையின்கண் உள்ள கரிய குயில் பாடுவதைக் காண்பாயாக ;

மணி - நீலமணியுமாம். ஒரு தனி - ஒப்பற்ற தனி ;
தன்னந் தனி ; "ஒரு தனி நின்றாய்," "ஒரு தனி யிருந்த, "ஒரு தனி யேறி" (4 : 96 : 16 : 33 ; 17:86.) என இந்நூலுள்ளே ஒரு தனியென்பது பயின்று வருகின்றது. மயில் தனக்கு-மயிலினது ஆட்டத்திற் கியைய.
விளித்தல்-பாடுதல்; 3"விளியாதான் கூத்தாட்டு" 4"விளித்தலின்னமிர் துறழ் கீதம்" என்புழி விளித்தல் இப்பொருள்படுதல் காண்க.

14--8, இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து - தேர்கள் சஞ்சரிக்கின்ற வீதியினின்றும் எழுந்த துகள் சேர்ந்து, வயங்கு ஒளிமழுங்கிய மாதர் நின்முகம்போல் - விளங்குகின்ற ஒளி மழுங்கப்பெற்ற நினது அழகிய முகத்தைப்போல, விரை மலர்த்தாமரை கரை
நின்று ஓங்கிய கோடு உடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண் - கரையில் நின்று வளர்ந்த கிளைகளையுடைய தாழையினது கொழுவிய மடலினின்றும்

1 மணி - 19 ; 57 - 8.    2 பெரும்பாண். 374.
3 திரிகடுகம். 11          4 சீவக. 1941.