பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

மாபெரும் பேரூர் மக்கட் கெல்லாம்
25 ஆவும் மாவுங் கொண்டுகழி கென்றே
பறையிற் சாற்றி நிறையருந் தானையோ
டிடவய மென்னும் இரும்பதி நீங்கி
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்
காயங் கரையெனும் பேரியாற் றடைகரைச்
30 சேயுயர் பூம்பொழிற் பாடிசெய் திருப்ப

23
உரை
30

       இருநில வேந்தனும் - அதனைக் கேட்ட பெரிய பூமியை ஆளும் அரசனும், மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம் - மிகப் பெரிய நகரத்தின்கணுள்ள மக்களுக்கெல்லாம், ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையிற் சாற்றி - பசுக்களையும் ஏனைய விலங்குகளையும் கொண்டு நகரத்தைவிட்டு நீங்குக என்று பறையறைந்து தெரிவித்து, நிறை அரும் தானையொடு இடவயம் என்னும் இரும்பதி நீங்கி-பகைமேற் செல்லும்போது நிறுத்தலரிய சேனைகளுடன் இடவயம் என்னும் பெரிய நகரத்தினின்றும் நீங்கி, வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் - வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரத்திற்குச் செல்லுகின்றவன்; காயங்கரை எனும் பேரியாற்று அடைகரைச் சேய்உயர் பூம்பொழில் பாடி செய்திருப்ப - காயங்கரை என்னும் பெரிய யாற்றினது அடைகரைக்கண் மிக உயர்ந்த பூஞ்சோலையிற் பாடி செய்து அமர்ந்திருக்க ;

       இடவயம் - அத்திபதியின் நகரம். பாடி -படைவீடு. வேந்தனும் சாற்றிச் செல்வோன் இருப்ப வென்க.