மந்திரங் கொடுத்த காதை

       
20




25
இலக்குமி கேளாய் இராகுலன் றன்னொடு
புலத்தகை யெய்தினை பூம்பொழி லகவயின்
இடங்கழி கமாமொ டடங்கா னாயவன்
மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழிச்
சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்

தெருமர லொழித்தாங் கிரத்தின தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்.

வெங்கதிர் அமயத்து வியன்பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி


20
உரை
28

       இலக்குமி கேளாய்-இலக்குமியே கேட்பாயாக; இராகுலன் தன்னொடு புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவையின் - நீ நின் கணவனாகிய இராகுலனோடு பூச்சோலையின் உள்ளிடத்தே ஊடலுற்றனை, இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்-அப்பொழுது அவன் வரம்பு கடந்து எழுதற்குக் காரணமாகிய காமத்தொடு அடங்காதவனாய், மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி-மெல்லியில் மடந்தையாகிய நின் மலர்போலும் அடிகளை வணங்கும் பொழுது, சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்-உயர்ந்த வானின் கண் திரிவோனாகிய சாதுசக்கரன் என்னும் முனிவன், தெருமரல் ஒழிந்தாங்கு இரத்தின தீவத்து - மனக்கவற்சி நீங்கி இரத்தின தீவத்தின்கணிருந்து, தருமசக்கரம் உருட்டினன் வருவோன் -அறவாழியை உருட்டிக்கொண்டு வருகின்றவன், வெங்கதிர் அமயத்து-நண்பகற்பொழுதிலே, வியன்பொழில் அகவயின் வந்து தோன்றலும்-அப் பரந்த சோலையினுள்ளே வந்து தோன்றுதலும்;
       
பழம்பிறப பெய்தி நின்றாளாகலின் அத்தெய்வம் மணிமேகலையை இலக்குமியென் றழைத்தது. புலத்தை - ஊடற்றன்மை; ஊடற் கூறுமாம். இடங்கழி காமம் - வரம்பு கடந்த காமமுமாம்; இடங்கழி என்பதே காமத்தை யுணரத்தலுமுண்டு. மெல்லியல் மலர் எனக் கொண்டு, மென்மைத் தன்மையுடைய மலர்போலும் அடி யென்னலுமாம். சாதுசக்கரன் - சாதுக்களின் மண்டலத்திலுள்ளவன் எனப் பொருள்படும் காரணப்பெயர்; ஓம் மணிபத்மேஹும் என்னும் மந்திரம் சுற்றிலும் எழுதப்பட்ட உலோகத்தாலாகிய சக்கரத்தை வலக்கையில் வைத்துச் சுழற்றிகொண்டிருத்தல் பௌத்தர்களிற் சிலருடைய வழக்கமென்றும், இவனும் அங்ஙனம் செய்பவனாதல் வேண்டுமென்றும் கூறுவர். இரத்தின தீவம்-இது மணிபல்லவத்திற்கு அயலிலுள்ளதோர் சிறு தீவு ; இத் தீவும், இதிலுள்ள சமந்தமென்னும் மலை முதலியவும் வரும் காதையானறியப்படும். தருமத்தைத் தடையின்றிச் செலுத்தினானென்பார், அதனைச் சக்கரமாக உருவகப்படுத்தி, உருட்டினான் என்றார். முன்பு "அறக்கதி ராழி திறப்பட வுருட்டி" (5.76) என்றமையுங் காண்க. சாதுசக்கரன் திரிவோன் வருவோன் வந்து தோன்றுதலுமென்க.