பாத்திரம் பெற்ற காதை



20




25
ஆயிழை தன்பிறப் பறிந்தமை யறிந்த
தீவ திலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்கிதன் அயலகத் திரத்தின் தீவத்
தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குள தாதலின்
தொழுதுவலங் கொண்டு வந்தேன் ஈங்குட்
பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்

19
உரை
29

       ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த - மணிமேகலை தன் முற்பிறப்பினை அறிந்த தன்மையை உணர்ந்த, தீவதிலகை செவ்வனம் உரைக்கும்-தீவதிலகை செம்மையாகக் கூறுகின்றாள், ஈங்கிதன் அயலகத்து இரத்தின தீவத்து-இம் மணிபல்லவத்தின் அயலிடத்துள்ளதாகிய இரத்தின தீவத்தின்கண், ஓங்குயர் சமந்தத்து உச்சிமீமிசை-மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய-அறத்திற்கு உரிமையுடையோனாகிய புத்தனின் இணையடிகள் என்னும், பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் - பிறவியாகிய பெரிய கடலைக் கடத்துவிக்கும், அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் - அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத்துள்ளதாகலின், தொழுது வலங் கொண்டு வந்தேன் ஈங்கு-அதனை வலங்கொண்டு பணிந்து ஈண்டு வந்தேன், பழுதில் காட்சி இந் நன் மணிப் பீடிகை - குற்றமற்ற தோற்றத்தினையுடைய நன்றாகிய இந்த மணிப்பீடத்தை, தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் - இந்திரன் ஏவலாற் காத்தலை மேற்கொண்டேன், தீவதிலகை என் பெயர் - எனது பெயர் தீவதிலகை என்பதாகும் ;

       ஓங்குயர், மீமிசை என்பன ஒரு பொருட் பன்மொழிகள். சமந்தம் சமனொளி யெனவும் வழங்குமென்பது, "இலங்கா தீவத்துச் சமனொளி யென்னுஞ் சிலம்பினை யெய்தி" (28 : 107-8) என்று பின் வருவதனா லறியப்படும். சமந்தம் என்பதும், சமனொளி என்பதும் இலங்கையிலுள்ள 'ஆடம்ஸ் பீக்' என ஆங்கில மொழியில் வழங்கும் மலையையே குறிக்குமென்று கருதுவர். அறவி - அறம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். அறவி நாவாய் - அறவுருவினதாகிய நாவாய் என்றுமாம். பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தும் அடியிணையாகிய நாவாய் என்க; 1"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேரா தார்" என்பதன் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க.
1குறள். 10.