பாத்திரம் பெற்ற காதை

40




45
இருதிள வேனிலில் எரிகதி ரிடபத்
தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத் திடைநிலை மீனத் தகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை யமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

40
உரை
45

       இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்பதாகிய விசாகத்தின்கண், போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும், ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக ;

       இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில் பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில் - சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்-வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும். புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில் ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி 'போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15 : 23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள் எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று. ஒவ்வோ

       ராண்டிலும் பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொருகாலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சு வினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.

       போதி - அரசமரம்; போதத்தையுடைய தென்பது பொருள் ; போதம்-ஞானம்; இதனடியிலிருந்தபொழுது நால்வகை வாய்மைகளை யும் அறிந்து கொள்ளுதற்குரிய ஞானத்தைப் புத்தன் அடைந்தமை யால், இஃது இப் பெயர் பெற்றதென்பர் ; போதியுரவோன், போதித் தலைவன், போதிமாதவன் என்றிங்ஙனம் இந் நூலுட் பல விடத்துப் பின் கூறப்படுதலும் காண்க. அரசு மரங்களுட் சிறந்ததென்பது பகவற்கீதை முதலியவற்றானும் அறியப்படும். போதி என்பது ஞானம் என்ற பொருளில் வருதலும் உண்டு.

       அமுத சுரபி-அமுதத்தைக் கொடுக்கும் காமதேனுவைப் போன்ற தென்பது பொருள் ; சுரபி-பசு; இனி, சுரபி-மணம் எனக் கொண்டு, அமிழ்தம் போன்ற மணமுடைய தென்றும் பொருள் கூறுவர்.