அறவணர்த் தொழுத காதை




10




15




20
புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
உதய குமரனாங் குற்றுரை செய்ததும்
மணிமே கலாதெய்வமும் மணிபல் லவத்திடை
அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்
ஆங்கத் தீவகத் தறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக்
களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெவ்வினை உருப்ப விளிந்துகே டெய்தி
மாதவி யாகியுஞ் சுதமதி யாகியுங்
கோதையஞ் சாயல் நின்னொடுங் கூடினர்
ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால்
பூங்கொடு நல்லாய் கேளென் றுரைத்ததும்

7
உரை
20

       புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் - தான் மலர் கொய்யுமாறு உவவனத்தின்கட் சேர்ந்தனையும், உதயகுமரன் ஆங்கு உற்று உரை செய்ததும் - உதயகுமரன் ஆண்டு வந்து மொழிந்தனையும், மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் - அப்பொழுது மணிமேகலா தெய்வம் தோன்றித் தன்னை மணிபல்லத்தின்கண் கொண்டு சென்றதனையும், ஆங்கத் தீவகத்து அறவோன் ஆசனம் - அத் தீவின்கணுள்ள புத்தன் பாதபீடம்; நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்-சென்ற பிறப்பைத் தனக்கு உணர்த்தி யருளினதையும், அளித்த பிறப்பின் ஆகிய கணவனை - அங்ஙனம் உணர்த்திய பழம் பிறப்பிற் கணவனா யிருந்தோனை, களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் - களிப்பு மிக்க கயல் மீனனைய நீண்ட கண்களையுடைய மணிமேகலா தெய்வத்தான் அறிந்தனையும், தவ்வையராகிய தாரையும் வீரையும் - முன்பிறந்தோராகிய தாரையும் வீரையும், வெவ்வினை உருப்ப விளிந்து கேடு எய்தி - தீவினை உருத்து வந்தூட்டுதலான் இறந்தெழிந்து, மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் - மாதவியாயும் சுதமதியாயும், கோதை அம்சாயல் நின்னொடுங் கூடினர் - அழகிய கூந்தலையும் மென்மையையுமுடைய நின்னொடும் கூடினர், ஆங்கவர் தம் திறம் அறவணன் தன்பால் - அவர்கள் வரலாற்றினை அறவணவடிகளிடம், பூங்கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் - பூங்கொடி போலும் நங்கையே கேட்பாயாக என்று கூறியதனையும் ;

       தன்னை படர்க்கையில் வைத்து, அணியிழை தன்னை என்பும், நேரிழைக்கு என்றும் கூறினாள். 'நெடுங்கண்' திரியா திருப்பின், மணி மேகலையெனப் பொருள்படும். ' தவ்வையராகிய' என்பது முதல் 'கேள்' என்பது காறும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றினை மணிமேகலை கொண்டு மொழிந்தது..